சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி | College student killed in luxury car DMK leader grandson bail plea rejected

1372148
Spread the love

சென்னை: சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நிதின்சாய் (19) மைலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல் அயனாவரம் பி.வி கோயில் தெருவைச் சேர்ந்த அபிஷேக் (20) என்ற இளைஞர் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 29 ஆம் தேதி நிதின்சாய் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும், மேலும் சில கல்லூரி நண்பர்களுடன் அண்ணா நகரில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர்‌.

நிதின் சாயின் பள்ளிகால ஜூனியர் நண்பரான வெங்கடேஷ் ஒரு பெண்ணை விரும்பியுள்ளார். அதே பெண்ணுக்காக பிரணவ் என்ற இளைஞரும் வெங்கடேஷிடம் சண்டையிட்டுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் தலையிட்ட நிதின் சாயையும் அவரது நண்பர்களையும், பிரணவுக்கு ஆதரவாக வந்த வேறொரு கல்லூரி மாணவர் சந்துரு ( திமுக பிரமுகர் பேரன்) தனது ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை கொண்டு மோதுவது போல் மிரட்டியுள்ளார். இதனால் நிதின் சாய் நண்பர்கள் ஆத்திரமடைந்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நிதின் சாய், அபிஷேக் சென்ற இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்று காரைக் கொண்டு மோதி நிதின் சாயை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சந்துரு காவல்துறையில் சரணடைந்தார். பிரணவ் உள்ளிட்ட மேலும் 3 பேரை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கில் முதல் குற்றவாளியான சந்துரு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி தேவராஜன், முதலில் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. மனுதாரர் வழக்கில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர், எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரு மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இன்னும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டி உள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவருக்கும், மனுதாரருக்கும் முன் விரோதம் உள்ளது. மேலும் கொலை வழக்கில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *