தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாததால் வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சுதா மோகன்லால் என்பவர் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். இவர், ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனக்கு சொந்தமான 8 சொத்துகளுக்கு கடந்த 2022-23-ம் ஆண்டு சொத்துவரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், சொத்துவரியை செலுத்தவில்லை.
முதல் அரையாண்டுக்கு ஒரு சொத்துக்கு மட்டும் வரியை செலுத்தி, 7 சொத்துகளுக்கு வரி செலுத்தாமலும், இரண்டாம் அரையாண்டுக்கான 8 சொத்துகளுக்கும் உரிய காலத்துக்குள் வரியை செலுத்தாமலும் இருந்துள்ளார்.
இந்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற 9-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாத சுதா மோகன்லாலை வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சுதா மோகன்லால் தனக்கு சொந்தமான வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்துவரியை காலம் தாழ்த்தி செலுத்தியது உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் வறையறுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டிருப்பதால் இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்க பேரூராட்சிகள் இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவரின் ஆணையை செயல்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுபாஷ் சந்திரபோஸ் வழக்க தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுதா மோகன்லாலை 3 மாதத்துக்குள் தகுதி நீக்கம் செய்யவும், அந்த விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, பேரூராட்சிகளின் இயக்குநர் உத்தரவின்பேரில், ஆலங்குளம் பேரூராட்சி தலைவருக்கு செயல் அலுவலர் நோட்டீஸ் அளித்தார்.
சொத்து வரியை உரிய காலத்துக்குள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியதற்காக உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பேரூராட்சி தலைவர் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் விதித்த காலக் கெடுவை கடந்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து, சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்த தவறியதால் நீதிமன்ற உத்தரவின்படியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படியும், சுதா மோகன்லால் ஆலங்குளம் பேரூராட்சிமன்ற 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சிமன்ற தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து தகுதி இழந்ததாக பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வெங்கட கோபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று சுதா மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை பேரூராட்சி உறுப்பினர்கள் ஏற்கெனவே கொண்டுவந்தனர். அதன் மீதான வாக்கெடுப்பு கடந்த 9-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த தேதிக்கு முன்பாகவே பேரூராட்சி தலைவர் பதவி உயர்வு மூலம் இடமாறுதலில் சென்றுவிட்டதால் அன்றைய நாளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இந்நிலையில், சொத்துவரி விவகாரத்தில் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவியை சுதா மோகன்லால் இழந்துள்ளார்.