சொத்து வரி நிலுவை: சென்னை ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர் உட்பட 40 கடைகளுக்கு மாநகராட்சி சீல் | tax arrears Corporation sealed 40 shops in t Nagar

1277326.jpg
Spread the love

சென்னை: சென்னை தியாகராய நகரில் நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்திருந்த ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர் உட்பட 40 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். கடந்த 2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகமாகும்.

எனினும் சிலர் ரூ.7 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதுபோன்ற நீண்ட கால நிலுவை வைத்துள்ளோர் 100 பேர் விவரங்கள் அடங்கிய பட்டியலை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.22 கோடியே 44 லட்சம் சொத்து வரி வசூலிக்க வேண்டியுள்ளது. இப்பட்டியலை வெளியிட்ட பிறகு, 2 பேர் சொத்து வரியை முழுமையாகவும், 8 பேர் பகுதியாகவும் செலுத்தினர். மற்றவர்கள் செலுத்தவில்லை.

இந்நிலையில், இன்று காலை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் சென்னை தியாகராய நகருக்குச் சென்றனர். அங்கு ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் (ரூ.37 லட்சம் நிலுவை) சண்முகா ஸ்டோர் (ரூ.28 லட்சம் நிலுவை) மற்றும் டாக்டர் நாயர் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் சுமார் ரூ.90 லட்சம் நிலுவை வைத்துள்ள 38 கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தற்போது சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் இனியும் வரியை செலுத்தாமல் தாமதித்தால், நோட்டீஸ் வழங்கி, சொத்துக்களுக்கு சீல் வைக்கப்படும். ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது தொடர்பான வலுவான விதிகள், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் காலத்தோடு சொத்துவரியை செலுத்தி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *