‘எலிவளையானாலும் தன் வளை’ என்று சொலவடை உண்டு. தனக்கென்று ஒரு சொந்த வீடு அமையாதா என்று ஏங்குபவர்கள் பலர். தற்போது பல ஆலயங்களின் பிரகாரங்களில் சின்னச் சின்னக் கற்களை அடுக்கிவைத்து பக்தர்கள் வேண்டுவதைப் பார்த்திருக்கிறோம். அவை அனைத்தும் சொந்த வீடு பிரார்த்தனையே. அப்படிப்பட்ட சொந்த வீட்டுக் கனவை விரைவில் நனவாக்கி அருளும் ஈசன் ஒருவர் உண்டு.
விழுப்புரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மரக்காணம். சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் 123 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலத்தில் ஈசன் பூமீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கடற்கரையோரம் மணல் குவியல் நிறைந்த பகுதி என்பதால், `மணற்கானம்’ என்றழைக்கப்பட்டது மருவி, மரக்காணம் என்றானதாகக் கூறப்படுகிறது.

இங்கே ஈசன் எழுந்தருளியது குறித்த தலபுராணம் சொல்லும் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று உண்டு. மாப்பிள்ளை ஒருவர் திருமணம் முடிந்ததும் முதன் முறையாக மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். அன்றாடம் சிவபூஜையும் சிவாலய தரிசனமும் செய்யாமல் உணவருந்தாத உத்தமர் அவர். ஆனால் அவர் பெண் எடுத்த ஊரில் சிவாலயம் ஏதும் இல்லை. மனம் வருந்திய மாப்பிள்ளை செய்வதறியாது திகைத்தார். அப்போது மாமியார் மருமகனின் குறை தீர ஒரு யோசனை செய்தார். தன் வீட்டின் அருகில் இருந்த தோட்டத்தில் மரக்கால் ஒன்றை எடுத்துக் கவிழ்த்துவைத்து அதற்கு விபூதி பூசி சிவலிங்கமாக மாற்றினார். பிறகு தன் மருமகனை அழைத்துவந்து மரக்கால் லிங்கத்தை தரிசனம் செய்யச் சொன்னார்.
மருமகனும் அங்கு வந்து தரிசனம் செய்து மகிழ்ந்ததோடு வழக்கத்தைவிட ஈசனின் தரிசனம் தனக்குள் சிலிர்ப்பைத் தருவதாகச் சொல்லி மகிழ்ந்தார். வீடு சென்று மனமார உண்டார். மாப்பிள்ளை போனபின் மாமியார் மீண்டும் மரக்காலை எடுக்க முயல அது நிஜ சிவலிங்கமாக மாறி இருந்தது. ஆனாலும் ஒரு கடப்பாரை கொண்டு அதைப் பெயர்த்து எடுக்க முயல மரக்கால்மீது பட்டு ரத்தம் கொப்பளித்தது. இதைக் கண்டு பயந்துபோன மாமியார் ஓடிப்போய் ஊராரிடமும் குடும்பத்தாரிடம் நடந்ததைச் சொன்னார். ஊராரும் ஓடிவந்து ஈசனை வணங்கி அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் அமைத்தனர் என்கிறார்கள்.
ஆதியில் இத்தலத்தில் பிரம்மன், வால்மீகி, பூமா தேவி, நந்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பிரம்மதேவர் உருவாக்கிய பிரம்ம தீா்த்தம், தலதீர்த்தமாக உள்ளது.
பூமியில் இருந்து எழுந்தருளியதால் ஈசன் பூமீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் என்றும் கூறுவர். அம்பிகையின் பெயர், கிரிஜாம்பாள். ஆலயம் எங்கும் அழகிய சிற்பங்களும் மண்டபங்களும் நிறைந்துள்ளன. வாஸ்து புருஷன், நடன மங்கையர், அறுபத்து நான்கு கலைகளை விளக்கும் சிற்பங்கள், சிறுத்தொண்டரின் சரிதம் கூறும் சிற்பம் போன்றவை இங்கு சிறப்பு. ஆலய கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்கை, பிரம்மா, பிட்சாடனர் எழுந்தருளுகின்றனர். துவாரபாலகியருடன் துர்கை சந்நிதி அமைந்திருப்பதும், கோஷ்டத்தில் விநாயகர் இல்லாமல் பிட்சாடனர் அருள்வதும் சிறப்பம்சம் எனலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இங்குள்ள துர்கைக்கு விளக்கேற்றி வழிபட, ஜாதகத் தடைகள் நீங்கும் என்கின்றனர்.

விநாயகர், முருகப்பெருமான் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர் சந்நிதியும் தனிச்சிறப்பானது. அம்பிகை சந்நிதிக்கு எதிரில் பைரவர் அருள்கிறார். தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், தீவினைகள் நீங்கும் என்கிறார்கள்.
இங்குள்ள ஸ்ரீகிரிஜாம்பிகை கருணை வழியும் திருமுக மண்டலத்தோடு, அபய-வரத ஹஸ்தத் திருக்கோலத்தில் கம்பீர வடிவில் திகழ்கிறாள். தன்னுடைய பிள்ளைகளின் துன்பங்களை வாஞ்சையோடு துடைத்தெறியும் சக்தியாக விளங்கும், அன்னையின் கடைக்கண் பார்வை நம் நெஞ்சை விட்டு அகலாத ஈர்ப்புகொண்டது என்பர்.
இங்குள்ள ஈசன் காலம் அறியமுடியாத பெருமை கொண்டவர் என்பர். முழுதும் அழிந்துபோன இந்தக் கோயிலை ராஜராஜசோழன் காலத்தில் திருப்பணி செய்து மீட்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. நிலந்தரு மகாதேவர், ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வர தேவர், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வார் திருபூமீசுவரமுடையார், பிருத்வீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவர், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனார், பூமீஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரானார் எனப் பல திருநாமங்களில் இவரைப் போற்றுகின்றன நூல்கள். தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் முற்பட்ட இந்த ஆலயம் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இருந்துவருகின்றது.
மரக்காணம் பூமீஸ்வரர் கருவறையில் கிழக்குத் திருமுக மண்டலத்தில் அருள்பாலிக்கின்றார். ஈசனின் கிழக்கு நோக்கிய `தத்புருஷ’ வடிவத்தை வணங்குபவர்கள், என்றும் குறைவில்லாத செல்வங்களைப் பெற்று ஏற்றம் பெறுவார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

சொந்த வீடு, நிலம், தோட்டம் போன்ற மண் சார்ந்த சொத்துகள் வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், அந்தச் சொத்தில் பிரச்னை இருக்கும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட பலன் கிட்டும் என்கிறார்கள். தங்களின் நிலம் அல்லது தோட்டத்தில் இருந்து மண் எடுத்துவந்து, பூமீஸ்வரர் முன்வைத்து பூஜித்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் அந்த நிலத்தில் வீடு கட்டுவது, பயிர் செய்வது போன்றவை விரைவில் நடைபெறும்.மேலும் மனை தொடர்பான பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் நிலம் தொடர்பான வேண்டுதல்கள் பலித்ததும், இங்குள்ள ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.