கூடங்குளம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை, பரந்தூர் பசுமை விமான நிலையம் என்ற வரிசையில் அடுத்து வந்திருக்கிறது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் 2015.51 ஹெக்டேர் (சுமார் 5,000 ஏக்கர், 20 சதுர கிலோ மீட்டர்!) பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அகல கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் அனுமதி அளித்திருக்கிறது மத்திய அரசு.
இந்த அனுமதியை ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை புகழ்’ வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனம்தான் பெற்றிருக்கிறது.
இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக ஏழு பெருங்கற் மலைகளும் பாறைப் பகுதிகளும் 72 ஏரிகளும் 200-க்கும் அதிகமான குளங்களும் 3 தடுப்பணைகளும் இருக்கின்றன. பல்லுயிர்ப் பெருக்க மண்டலப் பகுதியான இங்கே 250-க்கும் மேற்பட்ட வகைப் பறவைகளும் அபூர்வமான தாவரங்களும் இருக்கின்றன.
பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலப் படுக்கைகளும் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகளும் 2,000 ஆண்டுப் பழைமையான சமணச் சிற்பங்களும் 1,200 ஆண்டுகால குடைவரைக் கோவிலும் 800 ஆண்டுப் பழைமையான ஏரியும் இருக்கின்றன.
தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமெனக் கருதப்படுகிற இந்தப் பகுதியில்தான் டங்ஸ்டன் இருப்பதாக சுரங்கம் வெட்ட அனுமதித்திருக்கிறது மத்திய அரசு.
இதுபற்றிய தகவல் வெளியானதும், இந்த சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதமெழுதினார். மேலும், இந்தப் பகுதியில் ஒருபோதும் எவ்வித சுரங்கமும் தோண்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபடக் குறிப்பிட்டிருந்தார்.
இதையொட்டி அறிக்கையொன்றை வெளியிட்ட மத்திய அரசின் கனிமத் துறை, ஏலத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும் ஏலத்துக்கு எதிராக மாநில அரசு உள்பட யாரும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டது.
தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதைப் போல தெரிவிக்கப்பட, திமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சிக்க, தமிழ்நாடு அரசும் மத்திய அரசின் கூற்றை மிகக் கடுமையாகவும் திட்டவட்டமாகவும் மறுத்திருக்கிறது.
‘முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பான கனிமக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்தவுடனேயே, 3.10.2023-ல் மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளேன். நவம்பரில் இதற்குப் பதிலளித்த மத்திய சுரங்கத் துறையோ உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே ஏலம் விடப்படுவதாகவும் தேசிய அளவிலான தேவைகளைக் கருத்தில்கொண்டு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்து நமது எதிர்ப்புகளை நிராகரித்தது. தொடர்ந்து, இந்தப் பகுதி நிலங்களைப் பற்றி மத்திய அரசு கேட்டபோதும், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – பல்லுயிர்ப் பெருக்கப் பகுதி என்பதையும் சுட்டிக்காட்டினோம். இவை எவற்றையுமே கருத்தில்கொள்ளாமல்தான் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை மத்திய அரசு வழங்கியிருக்கிறது’ என்று மாநில கனிமங்கள் – சுரங்கங்கள் துறைக்கும் பொறுப்பான அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இதுபற்றி மதுரையின் மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசன் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், சுற்றுச்சூழல் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உள்பட்டே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சட்ட நடைமுறைகளின்படி இந்தக் குத்தகையை ரத்து செய்வதற்கான சாத்தியமில்லை என்றும் மத்திய கனிமவள அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டிருக்கிறது.
ஆக, தற்போது சின்னதாகத் தொடங்கிய மக்கள் போராட்டம் இனித் தொடர வேண்டியதாகத்தான் இருக்கும். மேலூர் வட்டத்திலுள்ள கவட்டையாம்பட்டி, எட்டிமங்கலம், ஏ. வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி போன்ற கிராமங்கள் எல்லாமும் சுரங்கம் அகலப் போகிற இந்தப் பகுதியில்தான் இருக்கின்றன.
ஒருவேளை சுரங்கம் அனுமதிக்கப்பட்டால்… இந்தப் பகுதி மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரங்களை – வயல்கள், வீடுவாசல்கள் அனைத்தையும் எங்கிருந்தோ வருகிறவர்களிடம் அவர்கள் கொடுக்கிற காசுக்கு விற்றுவிட்டு, வேறு இடங்களை நோக்கி உள்நாட்டிலேயே ஏதிலிகளாகச் (அகதிகளாகச்) செல்ல வேண்டியதுதான் (அனுபவிக்கிறவர்களுக்கு மட்டும்தான் இந்தக் கொடுமையை உணர முடியும். நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்துக்காக நிலம் கொடுத்தவர்களே இன்னமும் ஏதிலி நிலையிலிருந்து மீளவில்லை. அதோ அங்கேதான் எங்கள் வயலும் வீடும் இருந்தன என்று இன்னமும் நினைவுகளைத் தின்று செரித்துக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்).
இன்றைக்கு மத்திய, மாநில அரசுகள், எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கின்றன, அணுக்கழிவுகள் எல்லாமும் பத்திரமாகத்தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்று எத்தனையோ சமாதானங்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் எல்லாருடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆபத்து அடைகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை.
கூடாது கூடங்குளம் அணுமின் திட்டம் என்று 1980-களின் பிற்பகுதியில் தொடங்கி (தினமணியில் அப்போதைய ஆசிரியர் இருந்த ஐராவதம் மகாதேவன் கூடங்குள ஆபத்து பற்றி மிகச் சிறப்பான தலையங்கம் ஒன்றை எழுதினார். தொடர்ச்சியாக, இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாதென்றும் அறிவித்தார் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.) எத்தனையோ தொடர் மக்கள் போராட்டங்கள் நடந்தபோதிலும் கடைசியாக வந்தேவிட்டது. கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கப் போகிற காலத்தில் நடந்த போராட்டங்களும் மக்கள் அடக்கப்பட்ட விதமும் அனைவரும் அறிந்ததே.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மக்கள் நடத்திய போராட்டங்களையும் அந்த மக்களை ஒடுக்க அரசும் காவல்துறையும் செயல்பட்ட விதமும் நேரலையாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. காவல்துறையினர்தான் எத்தனை முனைப்பாகத் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர்? போராடியவர்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையும் வந்தது. தொடர்ச்சியாக வேறென்ன நடந்தது? நல்லவேளையாக போராட்டத்தின் நெருக்குதலால் ஆலை மூடப்பட்டிருக்கிறது.
எங்கிருந்து வந்தார்கள், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்றே தெரியாமல் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப் போவதாக வந்தார்கள்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக மதிப்பிடாமலும் மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தாமலும் இந்த ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகமும் அனுமதி அளித்திருந்தது.
1000 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கப் பாதை (!) அமைத்து ஆய்வகம், 2.30 லட்சம் கன மீட்டர் (!!) அளவுக்குச் சுரங்கம் தோண்டி, 6 லட்சம் டன் (!!!) பாறைகள் வெட்டி அகற்றப்படுதல் என எண்ணற்ற முனைப்புகள். மக்கள் போராடிப் போராடி மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தினார்கள்; தப்பினார்கள், தங்கள் மண்ணையும் வாழ்வையும் காப்பாற்றிக் கொண்டார்கள்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்ணப் படியளக்கும் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிக்குள் ஒன்றுமறியா செல்லப்பிள்ளை போல வந்திறங்கியது மீத்தேன் வாயுத் திட்டம். ஒட்டுமொத்த படுகையும் பாலையாகும் ஆபத்தைச் சற்றுத் தாமதமாகவே உணர்ந்த மக்கள் போராட்டங்களைத் தொடங்கினர். கூடவே ஹைட்ரோகார்பன் திட்டமும் சேர்ந்துகொண்டது. மக்களின் வாழ்வாதாரங்கள் பட்டுப் போய்விடும் என்ற நிலையறிந்த விவசாயிகளும் மக்களும் போராடத் தொடங்கினர். இனிப்பு தடவிய எத்தனையோ விளக்கங்களுக்குப் பிறகும் அடக்குமுறைகளுக்குப் பிறகும் மக்கள் ஏற்கவில்லை. ஒருகட்டத்தில் பெரும்போராட்டத்துக்குப் பிறகு – காவிரிப் படுகை பசுமை மண்டலமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்டது – மீதேன் – ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் முடிவுக்கு வந்தது (இன்னமும் பசுமை மண்டல அறிவிக்கைக்கான பரிந்துரையைத் தமிழ்நாடு அரசு அனுப்பவே இல்லை என்பதாக அண்மையில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு).
இருக்கிற சாலையே நன்றாக இருக்கும்போது எதற்காக எட்டுவழிச் சாலை? எத்தனை போராட்டங்கள்? எவ்வளவு இழப்புகள்? மக்களுக்கு எவ்வளவு துன்பங்கள்? சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கும் வருவதற்கும் ஒரு அரை மணி நேரம் கூடுதலாக ஆவதால் யாருக்கு, என்ன இழப்பு? கைவிடப்பட்டதாகத் தோன்றினாலும் இன்னமும் விதவிதமான முகமூடிகளுடன் இந்தச் சாலைகள் இன்னமும் ஏதேனும் வழிகிடைக்குமா என்று அலைந்துகொண்டுதானிருக்கின்றன. (அதென்னங்க, வழிநெடுக இருக்கிற பல்லாயிரக்கணக்கான மரங்களை எல்லாம் வெட்டி, பல நூறு ஏக்கர் வயல்களை எல்லாம் அழித்து வரப் போகிற சாலைக்குப் பசுமை விரைவுச் சாலை என்று பெயர்? கடுமையான விஷங்கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதைப் போலவா?).
இன்றைக்கும் தீர்வு கிடைக்காமல் மக்கள் எதிர்ப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது சென்னை அருகே அமைக்கத் திட்டமிட்டுள்ள பரந்தூர் பசுமைவெளி (!) விமான நிலையத் திட்டம்.
சுமார் 5,700 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாகப் போகும் இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம், தண்டலம், மடப்புரம், மேலேரி என 13 கிராமங்களும் இருந்த இடம் தெரியாமல் அழியப் போகின்றன. இந்தப் பகுதி விளைநிலங்கள் எல்லாமும் விமான நிலையத்துக்காகக் கையகப்படுத்தப்பட, இங்குள்ள மக்கள் அனைவரும் ஏதிலிகளாக வெளியேறப் போகிறார்கள்.
கடந்த வாரத்தில் ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பத்தாவது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் எல்லாம் தொடர்ந்து போராடுகிறார்கள். மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் எல்லாம் எதற்காக? மக்கள்தான் வேண்டாம் என்று மறுக்கிறார்கள் அல்லவா?
ஏகனாபுரத்தைப் போலவே இந்தப் பகுதி கிராமங்களின் மக்கள் எல்லாரும் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அரசு என்னவோ ஒரு புல்டோசரைப் போலவே எதையும் கண்டுகொள்ளாமல், ஏறி நசுக்கிக்கொண்டு, அடுத்தடுத்த வேலைகளைச் செய்து முன்னேறிக் கொண்டிருக்கிறது (பாவம், கிராமசபைகளும் அவற்றின் அதிகாரங்களும்!).
சென்னைக்கென ஏற்கெனவே இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக உருவாக்கப்படவுள்ள இந்த விமான நிலையத்துக்கான செலவு மதிப்பீடு ரூ. 32,704 கோடி. 13 கிராமங்களைக் காலி செய்து, 2,171 ஹெக்டேர் பரப்பில் வரப்போகிற இந்த விமான நிலையம் சுமார் 1,300 ஹெக்டேர் விளைநிலங்களையும் 577 ஹெக்டேர் பரப்பிலுள்ள நீர்நிலைகளையும் சேர்த்து விழுங்கப் போகிறது.
இந்த விமான நிலையம் எந்த வகையிலும் லாபகரமாக இருக்காது; இங்கே திட்டமிடப்படும் வசதிகள் யாவும் அருகே – ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் – மிகச் சிறப்பான வகையில் பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் கிடைக்கும்போது இவ்வளவு செலவு செய்து, இவ்வளவு மக்களை அகற்றி எதற்காக இந்த விமான நிலையம்? என்பது பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையொன்றில் முன்னாள் ஐஏஎஸ் அலுவலரும் நகர்ப்புற நிர்வாக வல்லுநருமான எம்.ஜி. தேவசகாயம் விளக்கியுள்ளார்.
படிக்க.. பரந்தூர் விமான நிலையம் தேவையில்லை – ஏன்?
இந்தக் கட்டுரையொன்றே பரந்தூர் விமான நிலையத்தின் தேவையின்மையை மிகத் தெளிவாக உணர்த்தக் கூடியது. ஆனால், இதை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? உண்மையை உணர்ந்திருப்பார்கள்? தெரியவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக இந்த அரசுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இறுதிவரை போராடித் தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மக்களும் தொடர்ந்து பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத்துக்கு எதிராக இப்போதும் போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அகல ஏலம் விடப்பட்ட விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை என்பதைக் கிட்டத்தட்ட உறுதியாகவே – ஏலம் எல்லாம் அப்பவே முடிஞ்சுபோச்சு, இனி ஒன்னும் பண்ண முடியாது – என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுரையிலிருந்து மேலூர் செல்லும்போது தெரிகிற பல்லாயிரம் காலத்துப் பாறைகளும் பச்சைவெளிகளும் எதிர்காலத்திலும் அடுத்தடுத்த தலைமுறைகள் பார்க்க இருக்குமா? அல்லது பெரும் பள்ளங்களும் இயந்திரங்களுமாக மாறிப்போகுமா? மக்களிடமும் மாநில அரசிடமும்தான் இருக்கிறது முடிவு!
மிகப் பெரிய தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் வந்தால்கூட அதையொட்டி குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடும்; இதன் தொடர்ச்சியாக பகுதி முழுவதும் சமூக – பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணும் வாய்ப்புக் கிடைக்கும். மிகவும் ஆபத்தான, மக்கள் நலனைப் புறந்தள்ளுகிற இந்தத் திட்டங்களால் அந்தந்தப் பகுதிக்கு என்ன பயன்?
உள்ளபடியே, உண்மையிலேயே இதுபோன்ற பிரமாண்டமான – ராட்சதத் திட்டங்கள் – இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டி, பல்லாயிரக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கையை அழிக்கப் போகிற இந்தத் திட்டங்கள் எல்லாம் – கொண்டுவரப்படுவது யாருக்காக? தயவுசெய்து மக்களுக்காக என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்!