கூட்டத் தொடரில் போனால் போகிறதென சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
தொடர் முடிய சில நாள்களே இருக்கும்போது, மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டையொட்டிய விவாதத்தின் முடிவில் உரையாற்றும்போது, அரசியல் சாசனம் பற்றி காங்கிரஸ் பேசுவதை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இப்படி முழங்குவது இப்போது பேஷனாகிவிட்டது. இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை இத்தனை முறை குறிப்பிட்டிருந்தால் சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டார்.
பற்றிக் கொண்டது, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எல்லாம் கிளர்ந்தெழுந்தன. மறுநாள் போராட்டம். நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள். அம்பேத்கரை அமித் ஷா இழிவுபடுத்திவிட்டார்; அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர்.
நாடு முழுவதும் இதுவே பேச்சாக, அடுத்த நாள் நாடாளுமன்ற நுழைவு வாயிலொன்றில் அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும் என ஒருபக்கம் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்; இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியினர் போராட்டம்.
ஒரே தள்ளுமுள்ளு என்கிறார்கள். யார் யாரைத் தள்ளிவிட்டார்கள், யாருக்கு எப்படிக் காயம் பட்டது? காயம் பட்டதா? யாருக்கும் தெரியாது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களில் இருவர் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். பிரதாப் சந்திர சாரங்கி என்கிற எம்.பி.யோ ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.