கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென ஒரு நாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். சில நாள்கள் முகாமிட்டார். பேச்சுகள் நடைபெற்றன. ஏப். 11 ஆம் தேதி இணைந்து உயர்ந்த கரங்களுடன், தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சந்திப்போம். தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும் என்று அமித் ஷா அறிவித்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற விருந்தில் அமித் ஷாவும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு கைநனைத்தனர்.
ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இடம் பெறுவார்களா? என்றபோது, அவர்களின் (அதிமுகவின்) உள்கட்சி விவகாரம் என்றதுடன், பிற கட்சிகளைச் சேர்ப்பது பற்றித் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் அமித் ஷா கூறிவிட்டார்.
கூட்டணி ஆட்சி என்பது விவாதமாகவே, சில நாள்கள் கழித்து, ஏப். 16, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கிற கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்துத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்கிறோம்; முதல் கட்டமாக பாரதிய ஜனதா இணைந்திருக்கிறது. பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித் ஷா கூறினார்; கூட்டணி அரசு என்று அவர் சொல்லவில்லை, நீங்கள் (செய்தியாளர்கள், அப்படியே மக்கள்) தவறாகப் புரிந்துகொண்டு கேட்கிறீர்கள் என்றொரு விளக்கமளித்தார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி.
அதே நாளில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரனோ, கூட்டணி ஆட்சி பற்றி பாஜகவின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.
விவாதம் தொடர்ந்துகொண்டிருந்தது.
இதனிடையே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்ற மதுரை ஹிந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் மோசமான விதத்தில் விமர்சித்ததும் கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட வேல் ஒன்றை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி பரிசாக அளித்ததும் புகைந்துகொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையில்தான் நேர்காணலில் கூட்டணி ஆட்சி பற்றிய கேள்விக்குப் பதிலாக ஒலித்தது அமித் ஷாவின் ஒற்றைச் சொல், ‘யெஸ்’!
இப்போது மறுபடியும் முதலிலிருந்து…
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல, அதிமுக ஆட்சிதான் என்ற எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்; ஆனால், அதிமுகதான் தனித்து ஆட்சி அமைக்கும் என்று (ஜூலை 16-ல்) குறிப்பிட்டதுடன், அது கூட்டணி அரசு அல்ல என்றும் கூறினார். கூடவே, இந்தக் கூட்டணிதான் அரசு அமைக்கும். யார் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறார்கள்? அதிமுக. பிறகு அதிகாரப் பகிர்வு பற்றி யார் முடிவு எடுப்பார்கள்? நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று மறுபடியும் பழனிசாமி விளக்கியுள்ளார்.
ஆனால், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு கொஞ்ச காலமாகப் பேசாமல் இருந்த அண்ணாமலையோ, திடீரென இப்போது, ‘அமித் ஷா ஒரு முறை அல்ல, பல முறை தெரிவித்திருக்கிறார். கூட்டணி ஆட்சிதான் என்று அமித் ஷா தெரிவித்தார் என்றால், நான் வேறொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது; அமித் ஷா கூறியதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அவர்கள் அமித் ஷாவுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்’ என்று சுற்றிவிட்டிருக்கிறார்.