சொல்லப் போனால்… 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!

Dinamani2f2024 10 262fyh98tbwc2fdy Chand.jpg
Spread the love

இந்திய நீதித் துறையில் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் தேவைப்படுகிற – நடந்திருக்க வேண்டிய – எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய இரு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

1.       நீதிதேவதையின் தோற்றம் திடீரென ஒரு நாள் மாற்றப்பட்டது

2.       சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்புக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்திருப்பது.

 நீதிதேவதையின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பின்னால் ஏராளமான கதைகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. பொதுவாக, நீதிக்குரிய கிரேக்கக் கடவுளான ஜஸ்டிஸியாவின் சிலைதான் அது.

 இந்த நீதி தேவதையின் தோற்றத்துக்கு நிறைய பொருள்கள் கற்பிக்கப்படுகின்றன. இருதரப்பு நியாயங்களையும் சான்றுகளுடன் சீர்தூக்கிப் பார்த்துப் பக்கச்சார்பின்றி சமநிலையில் நீதிவழங்குவதைக் குறிக்கிறது ஒரு கையில் ஏந்தியிருக்கும் தராசு.

அதிகாரம், பணபலம், செல்வாக்கு, யார் எவர் என்று பார்க்காமல் பாகுபாடின்றி  நீதி வழங்குவதைக் குறிக்கவே கண்களைக் கட்டியுள்ள கறுப்புத் துணி (16 ஆம் நூற்றாண்டில்தான் கறுப்புத் துணி கட்டும் நடைமுறை அறிமுகமானது. அதுவரையில் கண்கள் கட்டப்படாமல்தான் இருந்தது). கையிலிருக்கும் வாள் அதிகாரத்தின் – வல்லமையின் அடையாளம்.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் நீதி என்கிற இடங்களில் எல்லாம் இருப்பது இந்த தேவதைதான். சிலையின் பாணியில் – ஆடையில், கூந்தலில், காலணியில் என – சில மாற்றங்கள் வேண்டுமானால் இருக்கும். ஆனால், தராசு, கறுப்புத் துணி, வாள் பொதுவானவை.

ஆனால், எவ்வித முன் அறிவிப்புமின்றி, எந்தவித விவாதமோ, வெளிப்படைத் தன்மையோ இன்றி, திடீரென கடந்த புதன்கிழமை நாட்டுக்குப் புதிதாக ஒரு நீதிதேவதை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறாள் – உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில்.

புதிய நீதிதேவதையோ நெற்றியில் திலகமிட்டு, சேலையுடுத்தி ஆரங்கள் பூண்டிருக்கிறாள் (இப்போ தங்கம் விற்கிற விலைக்கு இந்த மாதிரி ஒரு ‘செட்’ காதணிகளுடன் ஆரங்களை எத்தனை சவரனில் செய்ய முடியும்? மொத்தம் எவ்வளவு விலை ஆகும் என்றெல்லாம் இப்போது யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது!). கண்களில் கட்டப்பட்டிருக்கும் கறுப்புத் துணி அகற்றப்பட்டுவிட்டிருக்கிறது. நீதிதேவதையின் கண்கள் இனி எல்லாவற்றையும் கண்டுகொள்ளும். கையிலிருந்த வாளுக்குப் பதிலாக அரசியல் சாசனப் புத்தகம். தராசு மட்டும் மிச்சம்!

ஏற்கெனவே சட்டங்களின் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டதைப் போல இதுவும் காலனிய பாரம்பரியத்தை அகற்றும் முயற்சியாகத்தான் என்று கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் மரபிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும், சட்டம் கண்கள் அற்றது அல்ல. ஒவ்வொருவரையும் இணையாகப் பார்ப்பது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கருதுவதாக அவருடைய அலுவலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எனவேதான், நீதிதேவதையின் தோற்றம் மாற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்ததாகவும் வாள் என்பது வன்முறையின் அடையாளம், ஆனால், நீதிமன்றங்கள் அரசியல் சட்டப்படி தீர்ப்புகளை வழங்குகின்றன. எனவே வாளுக்குப் பதிலாக அரசியல் சாசனம் என்றும் சந்திரசூட் சொன்னதாக இந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால், நீதிதேவதையின் தோற்றத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களைக் கேள்விக்குள்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கமோ,  இதுபற்றியெல்லாம் சங்கத்துடன் யாரும் விவாதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நாட்டின் நீதி நிர்வாகத்தில் வழக்குரைஞர்களுக்கும் இணையான பங்கிருக்கிறது. அதிரடியாகச் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது; அவர்களாகவே முடிவு செய்துகொண்டுவிட்டார்கள் என்றும் சங்கத்தின் செயற்குழு தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டிஷார் காலத்தில் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. தற்போது நீதிமன்றங்களில் எங்கேயும் – அல்லது பெரும்பாலும் – நீதி தேவதையின் சிலைகள் இருப்பதில்லை. தலைவர்களின் படங்களுடன் சரி. என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால், திரைப்படங்களில் வரும் நீதிமன்றக் காட்சிகளில் எல்லாம், கண்டிப்பாக லாங் ஷாட்டிலாவது, நீதிதேவதை நின்றுகொண்டிருக்கிறாள்!

ஒரு தனியார் நிறுவனத்தின் அடையாளத்தை – லோகோவை மாற்றுவதென்றால்கூட குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, அழைப்பு விடுக்கப்பட்டு, இயக்குநர்கள் கூட்டம் நடத்தி, வடிவங்களைப் பரிசீலித்து, ஒப்புதல் பெற்றுதான் மாற்றப்படும். இந்திய நீதித் துறையின் அடையாளம் இப்போது ‘இன்ஸ்டன்ட்’ ஆக மாற்றப்பட்டிருக்கிறது.

கறுப்புத் துணி அகற்றப்பட்டுப் புடவை கட்டிய புதிய நீதி தேவதையின் கண்கள் இனிவரும் காலத்தில் அதிகாரத்தைக் கண்டு அச்சப்படாமல் இருக்க வேண்டும்; பகட்டைக் கண்டு கூசாமல் இருக்க வேண்டும்; பணபலத்தைக் கண்டு பணிவு காட்டாமல் இருக்க வேண்டும் என்று கடைக்கோடி மக்களாகிய நாமும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

அயோத்தியில் பல ஆண்டுகளாக நிலவிவந்த ராமஜன்ம பூமி – பாபர் மசூதி விவகாரத்துக்குத் தீர்வு கிடைக்க உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட்கூட  கடவுளைத்தான் வேண்டியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரத்திலுள்ள தன் சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்றங்களில் நிறைய புதிய வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அவை அனைத்துக்கும் எங்களால் தீர்வளிக்க முடியவில்லை. அதுபோலவே அயோத்தி விவகாரமும் மூன்று மாதங்களாக என் முன் விசாரணையில் இருந்தது. அப்போது கடவுளின் முன் அமர்ந்து இதற்குத் தீர்வு கிடைக்க வழிவகை செய்யுமாறு வேண்டினேன். நான் நாள்தோறும் கடவுளை வழிபடுவேன். நம்பிக்கையுடையோருக்கு கடவுள் சிறந்த தீர்வுகளைத் தருவார் என்றும் குறிப்பிட்டார்.

அயோத்தி ராமர் கோவில் – பாபர் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பை, 2019, நவ. 9-ல், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான – நீதிபதி சந்திரசூட்டும் இடம் பெற்றிருந்த – ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கியது.

சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் தொழுகை நடந்தது என்பது மறுக்கப்படவில்லை. எனினும், தொடர்ச்சியாக முஸ்லிம்கள் வசமிருந்ததற்கான சான்றுகள் இல்லை. ராமர் இங்குதான் பிறந்தார் என்று ஹிந்துக்கள் நம்புவதால் அவர்களுக்கே கோவில் கட்டுவதற்காக இந்த நிலத்தை வழங்கலாம்; முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள சற்றுத் தொலைவில் வேறு நிலம் வழங்கலாம் என்று அமர்வு தீர்ப்பளித்தது (இந்தத் தீர்ப்பு பற்றி நிறைய விவாதங்கள் அப்போதே நடந்துமுடிந்துவிட்டன).

இது ஒருமனதாக வழங்கப்பட்ட தீர்ப்பு. எனினும், யாரோ ஒருவர்தான் எழுதியிருப்பார். தீர்ப்பை எழுதியவர் யாராக இருக்கும் என்பது இதுவரை தெரியாமலேயே இருந்தது. இப்போது, தன் சொந்த ஊரில் பேசும்போது, அயோத்தி வழக்கு தொடர்பாகத் தாம் கடவுளிடம் வேண்டிக்கொண்டதாகத் தெரிவித்திருப்பதிலிருந்து டி.ஒய். சந்திரசூட்தான் எழுதியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

தீர்வுக்காகக் கடவுளை நீதிபதி சந்திரசூட் வழிபட்டதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, ‘நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ஒருவருடைய முடிவுகள் / தீர்ப்புகள் யாவும் திட்டவட்டமாக அரசியல் சாசனப்படிதான், அச்சமோ, ஆதரவோ இன்றி, விருப்பு வெறுப்போ இன்றியிருக்க வேண்டும். தீர்ப்புகளை வழங்குவதில் கடவுள் சொன்னார் என்று யாரும் கூறிக்கொள்ள முடியாது’ என்றிருக்கிறார்.

‘தீர்ப்புக்குக் கடவுளே காரணம் என்று ஒரு நீதிபதியால் கூற முடியுமா? அதுவும் கடவுளே அந்த வழக்கில் ஒருதரப்பாக இருக்கும்போது? என்ற கேள்வி இன்னமும் இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி சந்துரு.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கடவுளைப் பொறுப்பாக்க முடியுமா? தலைமை நீதிபதியோ ஏற்கெனவே ஹிந்துக் கடவுளை வணங்குவதாகத் தெரிவித்துள்ளார். அவர் இல்லத்தில் நடந்த விநாயகர் வழிபாட்டில் நாட்டின் பிரதமரான மோடியே பங்கேற்று தீபாராதனை காட்டினார். இதேபோல வேறொரு மதத்தைச் சேர்ந்த நீதிபதி, வேறொரு மதத்தின் கடவுளை வணங்கிவிட்டு வந்தால், வழக்குகளின் முடிவுகள் என்னவாக இருக்கும்? – இவ்வாறு மேலும் பல கேள்விகள் இருக்கின்றன.

நாட்டில் தற்போது, மேலும் பல வளாகங்களில் அயோத்தி போன்ற மதங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது நினைவுகூரத் தக்கது.

உயர் பொறுப்பிலுள்ள நீதிபதிகள் கடவுளை வணங்கலாம், அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அதுவே வெளிப்படையாக காட்டிக்கொள்ளப்படும்போதும், வெளிப்படுத்தப்படும்போதும் விவாதங்களும் விமர்சனங்களும் எழுகின்றன.

ஆனாலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் நாடு தழுவிய அளவில் முனைப்பாகப் பரந்துபட்ட அளவில் விவாதிக்கப்பட வேண்டிய இதுபோன்ற விஷயங்கள் எல்லாமும்கூட ஏனோ சன்னமாக ஒலித்து அடங்கிவிடுகின்றன.

(இந்த ஆண்டு ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டித் திறப்பு விழா  நடைபெற்றது. கடந்த ஜூலை மாதத்தில் அயோத்தி சென்று தலைமை நீதிபதி சந்திரசூட்டும் பாலராமரை வழிபட்டு வந்தார்).

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடுத்து என்ன செய்யப் போகிறார்?

* * *

பிறகு எதற்குதாங்க இந்த ஆதார்?

 இந்த ஆதார் அட்டை பிறகு என்னத்துக்குத்தான் பயன்படுகிறது?

ஏற்கெனவே ஆதார் அட்டை வெறும் அடையாளச் சான்றுதான், முகவரிக்கான சான்று அல்ல என்றார்கள். இப்போ என்னடாவென்றால், அது குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும், பிறந்த தேதிக்கான சான்றும் அல்ல என்றும் அரசு தெரிவித்துவிட்டிருக்கிறது. உருப்படியான ஒரே பலன், ஆதார் அட்டையைக் காட்டி  சிம் கார்டு வாங்கலாம்! அப்புறம் சாகிறவர்களுக்கெல்லாம் இடுகாட்டிலோ, சுடுகாட்டிலோ ஆதார் அட்டையைக் கேட்கிறார்களாம். என்ன கொடும சரவணா!

சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *