இந்தத் தேர்தலில் திடீரென ஜோ பைடனுக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் எப்போது அறிவிக்கப்பட்டாரோ அன்று முதலே கறுப்பர்கள், கலப்பு இனத்தினர், வெளிநாட்டினர், குடியேறியோர் என மக்களைப் பிளவுபடுத்தும் இன வெறுப்புப் பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப்பும் அவருடைய ஆதரவாளர்களும் தொடங்கிவிட்டார்கள் என்றால் மிகையில்லை.
இதன் மூலம் வெள்ளையின வாக்குகள் – ஒட்டுமொத்தமாக வலதுசாரி வாக்குகள் டிரம்ப்பை நோக்கி நகர்ந்துவிட்டன. மேலும், பழைமைவாதம், கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாடு போன்றவற்றால் கிறிஸ்துவர்களின் வாக்குகளும் குறிப்பாக இவாஞ்செலிகள் பிரிவு கிறிஸ்துவர்கள் வாக்குகளும் டிரம்ப்புக்கு ஆதரவாக மாறிவிட்டன.
வெள்ளையினத்தின், கிறிஸ்துவத்தின் செல்வாக்கு மிகுந்த நாடாகத்தான் அமெரிக்கா திகழ வேண்டும் என்ற மனநிலை கொண்டோர் ஒட்டுமொத்தமாக டிரம்ப்பைத் தாங்கிப் பிடிக்க, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் கமலா ஹாரிஸ் தரப்பினர் தோற்றுப் போய்விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சிக்கலான இந்தப் பிரச்சினையில் ஜனநாயகக் கட்சியினருக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் மிகச் சரியாகத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார் டிரம்ப்.
தவிர, ஏற்கெனவே அதிபராக இருந்த கறுப்பினத்தவரான ஒபாமாவைப் போன்ற உந்துசக்தியுமல்லர் கமலா ஹாரிஸ். இவருக்கென தனிப்பட்ட முறையிலான ரசிகர் கூட்டமோ, ஆதரவாளர்கள் திரளோ இல்லை எனலாம். ஆனால், எதிர்த்தரப்பில் என்னதான், எவ்வளவுதான் உளறிக்கொட்டிக்கொண்டிருந்தாலும் டிரம்ப் ஆதரவாளர்கள் எப்போதும்போல அவரைத்தான் வலுவாக ஆதரித்துக்கொண்டிருந்தார்கள், கலையவே இல்லை. எவ்வளவு பெரிய பலம்!