சென்னை: அரியலூர், சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்று போற்றப்பட்ட மாமன்னன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழகங்கம் என்ற ஏரியை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
சோழகங்கம் என்ற ஏரியை தூர்வாரி சீரமைக்க ரூ.663 கோடி செலவாகும் என தமிழக அரசின் நீர்வளத்துறையே மதிப்பீடு செய்துள்ள நிலையில், வெறும் ரூ.12 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பதால் எந்த பயனும் ஏற்படாது. தமிழக அரசின் இந்நடவடிக்கை இராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்காது; அவமதிப்பையே ஏற்படுத்தும்.
சோழ நாடு சோறுடைத்து என்று இலக்கியங்களிலும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று இன்றைய நடைமுறையிலும் காவிரிப் பாசனப் பகுதிகள் போற்றப்படுவதற்கு சோழர்கால நீர்ப்பாசனத் திட்டங்கள் முதன்மைக் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால், காலப்போக்கில் சோழர்கால பாசனக் கட்டமைப்புகள் பராமரிப்பின்றி சீரழிந்த நிலையில், அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2022&ஆம் ஆண்டு அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டேன்.
அதைத் தொடர்ந்து அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி 13.07.2023 ஆம் நாள் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தையும் தொடங்கி வைத்தேன். அதனால், இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
சோழர் கால பாசனத் திட்டங்களைக் கட்டமைத்த மன்னர்களில் முதன்மையானவரான இராஜேந்திர சோழன், கங்கைக்கரையோரப் பகுதிகளை போர்த் தொடுத்து கைப்பற்றியதன் அடையாளமாக சோழகங்கம் ஏரியை 1025 ஆம் ஆண்டில் கட்டியதன் 1000 ஆம் ஆண்டு வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கடந்த ஜூலை 4 ஆம் தேதி தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து தான் ரூ.12 கோடி செலவில் சோழகங்கம் ஏரியைத் தூர்வாரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இத்திட்டம் எவ்வகையிலும் பயனளிக்காது.
பொன்னேரி என்று நிகழ்காலத்தில் அழைக்கப்படும் சோழகங்கம் ஏரி நினைத்துப் பார்க்கும் போதே வியக்க வைக்கும் அளவுக்கு 16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது. பல நூற்றாண்டுக்கு ஆக்கிரமிப்புக்குப் பிறகும் 5.கி.மீ சுற்றளவைக் கொண்டது. அவ்வளவு பெரிய ஏரியை ரூ.12 கோடியில் தூர்வாரி சீரமைப்பது சாத்தியமற்றது. இந்த உண்மை தமிழக அரசுக்கும் தெரியும். ஆனால், தமிழ்நாட்டு மக்களை எளிதாக ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் தான் பெயரளவில் இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
சோழகங்கம் ஏரியை தூர்வாரி சீரமைப்பது உள்ளிட்ட சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால் ஏற்பட்ட நன்மைகளையும் விளக்குவதன் மூலம் தான் இந்த விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுவதை அம்பலப்படுத்த முடியும்.
சோழர்கால பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு 14.03.2023 ஆம் நாள் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து சோழர் பாசனத்திட்டம் குறித்து ஆய்வு செய்த மருதையாற்று வடிநிலக் கோட்டத்தின் செயற்பொறியாளர் அலுவலகம், சோழகங்கம் ஏரியை சீரமைப்பது குறித்து விரிவான அறிக்கையை தயாரித்து கடந்த 07.06.2023 ஆம் நாள் அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் சோழகங்கம் ஏரியை தூர்வாரி அதன் முழுமையான கொள்ளளவை எட்ட வேண்டும் என்றால், அதில் படிந்து கிடக்கும் ஒரு கோடியே 52 லட்சத்து 14,941 கனமீட்டர் வண்டல் மண்ணை அகற்றி, அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள சுரங்கங்களில் கொட்டி நிரப்ப வேண்டும் இதற்கு மட்டும் ரூ.452.23 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சோழகங்கம் ஏரிக்கு நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு வருவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.200 கோடி, 13 கி.மீ வரத்துக் கால்வாய், உபரிநீர்க் கால்வாய் ஆகியவற்றை தூர்வார ரூ.8.50 கோடி, ஏரியின் மதகுகளை சீரமைக்க ரூ.2 கோடி என மொத்தம் ரூ.662.73 கோடி செலவாகும் என்று விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இப்போது திட்ட மதிப்பு ரூ.700 கோடிக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கக்கூடும். ஆனால், அதன் மதிப்பில் வெறும் 1.5% தொகையை மட்டும் ஒதுக்கி விட்டு சோழகங்கம் எனப்படும் பொன்னேரியை தூர்வாரி சீரமைக்கப் போவதாகவும், இதன் மூலம் மாமன்னன் இராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கப் போவதாகவும் தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டதாகும். இது இராஜேந்திர சோழனை அவமதிக்கும் செயலும் ஆகும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதி ஒரு தடையே கிடையாது. அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் உள்ளகட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட கனிமவள நிதி அறக்கட்டளையில் இருக்கும் நிதியைக் கொண்டும், கூடுதல் நிதியை பன்னாட்டு அமைப்புகளிடம் கடன் வாங்கியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விருப்பமும், அக்கறையும் அரசுக்கு துளியும் இல்லை.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஒரு பாசனத் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. தமிழக மக்கள்தொகையில் 60 விழுக்காட்டினரின் வாழ்வாதாரமாக திகழும் விவசாயத்திற்கு தேவையான பாசனத் திட்டங்களை செயல்படுத்தத் தவறியதற்காக திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இதற்கு பரிகாரம் தேடும் வகையில் சோழகங்கம் ஏரி மட்டுமின்றி, அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகளை, குறிப்பாக 100 ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட ஏரிகளை தூர்வாருதல், ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் இடையிலான நீர்வரத்துக் கால்வாய்கள், ஏரிகளை இணைக்கும் கால்வாய்கள் ஆகியவற்றை புதுப்பிப்பத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரியலூர், சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
சோழகங்கம் ஏரியின் 1000 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் 27 ஆம் நாள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக அமைச்சர்கள் குழு சந்தித்து பேசி சோழர் பாசனத் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதியைப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.