மதுரை: சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அம்மச்சியாபுரம் கிராமம். 1,000-க்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர்.
இக்கிராம மக்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊருக்கு முன்பாக புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. கடந்த வாரம் திறக்கப்பட்டு குடிநீர் விநியோகமும் தொடங்கியது.
ஆனாலும், அதிகாரிகளின் ஆய்வுக்கென மேல்நிலைத் தொட்டியின் மூடி மட்டும் மூடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அத்தொட்டியில் இருந்து விநியோகமான குடிநீரில் துர்நாற்றம் வீசியது. புதிய தொட்டி என்பதால் பெயின்ட் வாசமாக இருக்கலாம் எனக் கருதி ஒரு தரப்பினர் தொடர்ந்து தண்ணீரை பிடித்து குடித்து வந்தனர்.
இருப்பினும் நாற்றம் தொடர்ந்து நீடித்தது. இதுகுறித்து ஊர் மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையில் அவ்வூரைச் சேர்ந்த ஓரிருவர் நேற்று மேல்நிலை தொட்டியின் மேல் பகுதியில் பார்த்துள்ளனர். தண்ணீரில் மனித மலம் மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகள் விசாரணை: சோழவந்தான் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி காந்தம், வட்டாட்சியர் பார்த்திபன், விஏஓ பழனி, டிஎஸ்பி ஆனந்த்ராஜ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொட்டி குடிநீரில் மனித மலத்தைக் கலந்தது குறித்து விசாரணை நடத்தினர். தொட்டியின் மேல் பகுதி மூடாமல் இருந்ததால் அதன்மேல் ஏறி சிறுவர்கள், யாரேனும் விளையாட்டாக இதைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் திட்டமிட்டு குடிநீர் தொட்டியில் மனித மலத்தை சமூக விரோதிகள் கலந்தனரா என்ற கோணத்தில் கிராம மக்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இப்புகார் குறித்து விசாரிக்கிறோம். மனித மலமா என்பதை ஆய்வின் அடிப்படையில்தான் உறுதி செய்ய முடியும்,’ என்றனர்.