ஜனநாயகன்: `எனக்கு ரொம்பவே முக்கியமான நாள் அது; மன வலியோட காத்திருக்கேன்!' – அருண் குமார் ராஜன்

Spread the love

ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை தெரியவில்லை.

இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் சின்னத்திரை நடிகர் அருண் குமார் ராஜனிடம் பேசினோம்.

திருவிழா மோட்ல இருந்தோம்!

”கடந்த ஒரு வாரமா தூக்கமே இல்லை. டிவியில இருபது வருஷக்கு மேல இருந்தாலும் பெரிய திரையில் என் முதல் படம் இது. பட வாய்ப்பு வந்தப்ப, ‘முதல் படமே விஜய் சார் படமா’னு நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.

படம் வெளியாகற தேதியை நான் மட்டுமில்ல, என் குடும்பமே ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திட்டிருந்தது.

விஜய் சார் படம்னா சும்மாவே தெறிக்க விடும். அரசியல் என்ட்ரி, கடைசிப்படம்னு அறிவிச்சதுன்னு எல்லாம் சேர்ந்துக்கிட திருவிழா மோட்ல இருந்தோம்.

Jana Nayagan - Vijay
Jana Nayagan – Vijay

ஆனா கடைசி நேரத்துல எல்லாம் மாறி படம் வெளிவர முடியாத ஒரு சூழல் உருவாகிடுச்சு.

லட்சக் கணக்கான விஜய் சார் ரசிகர்களைப் போலவே நானும் என் வீட்டாருமே கடுமையான மன உளைச்சல்ல இருக்கோம்.

டிவியில இருக்கிறவங்களுக்கு தங்களைப் பெரிய திரையில் பார்க்கிற அந்த நிமிடம் ரொம்பவே நெகிழ்ச்சியானது. அனுபவிக்கிறவங்க மட்டுமே அதை உணர முடியும். அப்படியொரு நாளுக்காக மன வலியோட காத்திட்டிருக்கேன்னுதான் சொல்லணும். படம் வெளிவராத சூழல் என்னை ரொம்பவே கஷ்டப் படுத்துது.

விவகாரம் கோர்ட்டில் இருக்கறதால டீடெய்லா நான் எதுவும் பேசக் கூடாது.

‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீ மேக்தான்னு வெளியில பேசறாங்கனு கேள்விப்பட்டேன். ஒரு வாதத்துக்கு அதுவே உண்மைனு எடுத்துகிட்டால் கூட அந்தப்படம் கதைக்காக தேசிய விருது வாங்கியது. தேசிய விருது வாங்கிய கதையில் திரும்பவும் சென்சார் கட்னா அது எப்படின்னு ஒண்ணுமே புரியலை’ என ரொம்பவே நொந்து போய் முடித்தார் அருண்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *