ஜனநாயகன்: “சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு…" – சாடும் தமிழிசை

Spread the love

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் ‘ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.

நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஜனநாயகன்
ஜனநாயகன்

சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்-க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ், இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

தமிழிசை சௌந்தராஜன்
தமிழிசை சௌந்தராஜன்

திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக தி.மு.க-வின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார்.

அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில்கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது.

அதன் நடைமுறையை அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை.

சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு, அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *