நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று (ஜனவரி 20) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸா தலைமையிலான அமர்வில் காலை 11:30 மணியளவில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன் மற்றும் பிரதீப் ராய் ஆஜராகினர். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா என்று நீதிபதிகள் கேட்டபோது, அவர் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது என்று சென்சார் போர்டு தரப்பு தெரிவித்தது.
சென்சார் போர்டு தரப்பில், படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், 14 காட்சிகளை நீக்கிய பிறகு சான்றிதழ் வழங்கக் கோரியதாக படத் தயாரிப்பு தரப்பு வாதிட்டது. சினிமாட்டோகிராபி விதிகளின்படி, வாரியமே படத்தைப் பார்த்து சான்றிதழ் பரிந்துரைக்கலாம் அல்லது மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம் என்றும், புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும் சென்சார் போர்டு தரப்பு வாதங்களை முன்வைத்தது
நீதிபதிகள், சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தைப் பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினர். சென்சார் போர்டு தரப்பில், படத்தைப் பார்த்து ஆலோசனை வழங்க குழு உள்ளது என்றும், அந்த குழுதான் படத்தைப் பார்த்துள்ளது என்றும் பதிலளிக்கப்பட்டது. மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள் தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது என்றும் வாதிடப்பட்டது.
சென்சார் போர்டு தரப்பில், சினி மோட்டோகிராபி சட்டப்படியும் விதிகளின்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் தணிக்கை வாரியத் தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. படத்தை 9-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது.
வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்றும் சென்சார் போர்டு தரப்பு வாதிட்டது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலையில் மீண்டும் விசாரணை தொடங்கி, இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டு வருகின்றனர். ஜனநாயகன் படம் வெளியாகும் என இத்தீர்ப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுஇருக்கிறார்கள்.
