“படத்தை பார்வையிட்ட குழுவினர், படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக வீட்டுக்கு சென்று விட்டு நான்கு நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளையே நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும்” என, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், “தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் தரவில்லை.
ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் ஓடிடி தளம் சட்ட நடவடிக்கை எடுக்கும்” என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிலை எடுத்து வைக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது வணிகம் எனும் போது தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், “ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படம் ரிலிஸ் தேதி அறிவிக்க சான்று பெறும் வரை காத்திருக்கும் நடைமுறை இங்கு இல்லை. பாலிவுட்டிலும் படங்கள் வெளியீட்டு தேதி சான்று பெறும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.