நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மறு ஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது. இதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் அணுகியது. ஆனால் அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது, பதில் மனு தாக்கல் செய்யக்கூட தணிக்கை வாரியத்துக்கு தனி நீதிபதி அவகாசம் வழங்கவில்லை.
படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கும்படி ஆய்வுக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், தணிக்கை உறுப்பினர் அளித்த புகாரின் பேரில்தான் மறுஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் எந்த தவறும் இல்லை’ என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் ‘தணிக்கை குழு படத்தை பார்த்து சில காட்சிகளை நீக்கும்படி கூறியது. அந்த காட்சிகளை நீக்கிய பிறகு, நீக்கப்பட்ட காட்சிகளை சுட்டிக்காட்டி எப்படி புகார் அளிக்க முடியும்? படத்தை பார்த்த ஆலோசனைக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர், தணிக்கை சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்யலாமே தவிர, சான்றிதழ் வழங்கக்கூடாது என புகார் அளிக்க முடியாது.
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாததால், தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. என்று வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் வரும் 27-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது .அன்றைய தினம் ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கும் என தெரியவரும்.
