நடிகர் விஜய் தவெக எனும் கட்சியை தொடங்கியதால், ஜனநாயகன் தனது கடைசி திரைப்படம் அறிவித்துள்ளார். ‘ஜனநாயகன்’ படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமையாததால், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தாமதம் ஏற்பட்டது.
இதற்குப் பிறகு, உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் என பல இடங்களில் மனுதாக்கல் செய்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது. கடந்த மார்ச் 9ஆம் தேதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய தினம் ஆய்வு செய்துவது ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று மும்பையில் தணிக்கை குழுவினர் ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் அரசியல் சார்ந்த கருத்துகள் ‘ஜனநாயகன்’ படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்று தணிக்கைக்குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே, படம் வெளியாவது தொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும் என தெரிகிறது.
தற்போது தமிழக உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால். அந்த பணிகளில் தேர்தல் ஆணையம் பிஸியாக உள்ளது. அதனால் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வதில் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது.
