விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.
ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.
தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்ட நீதிபதி திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.27) தீர்ப்பு வழங்குகிறது. இன்று காலை 10்.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.