திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகத்தை ஜனவரி மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதன் ஒருபகுதியாக ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக ஊழல் பட்டியல் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ‘திமுக ஃபைல்ஸ்’ பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் முறைகேடுகள் நடந்திருந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. அதனை தொடர்ந்து, திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்று என்ற பெயரில் தொடர்ச்சியாக 5-க்கும் மேற்பட்ட ஆடியோ பதிவை அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். அந்த உரையாடலில் ஒரு வழக்கு விசாரணை கையாளப்படுவது குறித்து அவர்கள் பேசுவது இடம்பெற்றிருந்தது.
அந்தவரிசையில் தற்போது, அடுத்த பாகத்தை ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாகவும் அதில், திமுக அரசின் ஒப்பந்தங்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் இடம்பெறும் எனவும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: திமுக ஃபைல்ஸ்ஸின் அடுத்த பாகத்துக்காக ஊழல் பட்டியல் விவரங்களை சேகரிக்கும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இதற்காக, தனக்கு நம்பிக்கையான ஒரு குழுவை நியமித்துள்ளார். அக்குழு, தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஆய்வுசெய்து, எந்த துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதோ, அதுதொடர்பான விவரங்களை சேகரித்து அண்ணாமலையிடம் தெரிவிப்பார்கள்.
குறிப்பாக, திமுக ஆட்சியின்போது ஒவ்வொரு துறையிலும் போடப்பட்ட ஒப்பந்தங்கள், ஒப்பந்ததாரர்களின் விவரங்களை அண்ணாமலை சேகரித்து வருகிறார். மேலும், திமுக மீது அதிருப்தியில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளும், திமுக ஆட்சியில் நடந்திருக்கும் ஊழல் தொடர்பான விவரங்களை அக்குழுவிடம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், அதிமுக ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ற ஊழல் விவரங்களையும் அண்ணாமலை வெளியிட இருப்பதாக தெரிகிறது. இதற்காக, அதிமுக ஆட்சியில் அரசு துறைகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள், அதிமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் அண்ணாமலை சேகரித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.