`ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்ற 5,000 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?’ – அன்புமணி

Spread the love

2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வேலைநாளான நேற்று 5000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர்.  அவர்களின் கணிசமானவர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்  திட்டத்தின் கீழ் ஓய்வூதிடம் பெற தகுதியானவர்கள் ஆவர். திமுக அரசு கூறியிருந்தவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், நேற்றுடன் ஓய்வு பெற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு  தமிழ்நாடு  உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி பயனடைவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அத்தகைய ஆணைகள் எதுவும் நேற்று ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஒருவருக்கும் பயனளிக்காத தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 3-ஆம் தேதி அறிவித்த போதே, தங்களுக்கு ஆதரவான அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, அவர்களை  இனிப்பு ஊட்டச் செய்து ஏராளமான நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றியது. ஒருவேளை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஒரு விழாவையே திமுக அரசு நடத்தியிருக்கும். ஆனால், எதையும் செய்யாமல் அடக்கி வாசிப்பதில் இருந்தே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகிறது.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும்.

ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக  அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டால் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விடும். ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளை வகுப்பது மிகவும் எளிது. ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ரூ.13,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

எனினும், அதற்கான நிதி திமுக அரசிடம் இல்லை என்பதால் அந்த நிதியை ஒதுக்கவும் முடியாது; ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடியாது. ஆனாலும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்துகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *