கடந்த ஆண்டு செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ வசம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்ததை தொடா்ந்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ள்ப்பட்டது.செப்டம்பா் 27, 2025 அன்று தவெக பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்
சிபிஐ விசாரணைக்காக விஜய் திங்கள்கிழமை காலையில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணையின் போது விஜய்யுடன் அமர அனுமதிக்கப்பட்ட அவரது வழக்கறிஞா் மட்டுமே சிபிஐ அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டாா்.தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு, அவா் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிபிஐயின் சிறப்பு குற்றப்பிரிவு பிரிவின் குழு விஜயிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல். சிபிஐ விசாரணை குழுவால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் விஜய்யிடம் வழங்கப்பட்டு, அதற்கு எழுத்துப்பூா்வமான வாக்குமூலம் அளிக்குமாறு கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு உதவுவதற்காக அந்தக் குழுவிலிருந்து ஒரு சுருக்கெழுத்தாளரும் நியமிக்கப்பட்டாா். விஜய் தனது வழக்கறிஞரின் உதவியுடன் பதில்களை அளித்தாா். விசாரணை குழுவில் இருந்த ஒரு டிஎஸ்பி நிலை அதிகாரி, இரண்டு ஆய்வாளா்கள், இரண்டு உதவி ஆய்வாளா்கள் மற்றும் பிற காவலா்களின் ஆதரவுடன் விஜயிடம் விசாரணை நடத்தினாா்.
மதிய உணவை வெளியில் இருந்து கொண்டுவர விஜய்க்கு அனுமதிக்கப்பட்டது. மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இடைவேளையின் போது அவருக்கு உணவு வழங்கப்பட்டது, அதன் பிறகு விசாரணை மீண்டும் தொடங்கியது. சுமார் 6 மணி நேரம் விஜயிடம் விசாரணை நடந்ததாக தெரிகிறது. விசாரணை நிறைவடைந்து 6.15 மணிக்கு அங்கிருந்து வெளியேறினாா்
இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு விசாரணை வைத்து கொள்ள சிபிஐயிடம் விஜய் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்டு ஜனவரி 19-ம் விஜயிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தனிவிமானம் மூலம் டெல்லியிலிருந்து விஜய் அவரது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை திரும்பினார்.
