ஜனவரி 25 வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு – Kumudam

Spread the love

வீரவணக்க நாள் குறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில்:ஜனநாயகப் போர்க்கள வீரர்களான உடன்பிறப்புகளுக்கு ஓய்வில்லை. உங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களில் ஒருவனான எனக்கு ஓய்வுமில்லை – உறக்கமுமில்லை.நம் உடன்பிறப்புகள் தேர்தலுக்கான கட்சி அரசியல் வேலைகளை மட்டும் செய்யவில்லை. ஒவ்வொரு குடிமக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையைப் பாதுகாக்கும் பணியையும் களத்தில் நின்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அடிக்கடி சொன்னதுபோல, நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம். அந்தக் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சமூகநீதி – மதநல்லிணக்கம் – மாநில உரிமைகளை இலட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப் பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம்.

போர்க்களம் காணும் படை வீரர்கள் தங்களின் நாட்டைக் காத்திட உறுதியேற்பது வழக்கம். ஜனநாயகக் களம் காணும் கழகத்தின் இலட்சிய வீரர்களான உடன்பிறப்புகள், ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன – மொழி எதிரிகளான பா.ஜ.க.வையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்.

உங்களில் ஒருவனான நான், தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து – நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன்.

 பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.வீரவணக்கத்துடன் தொடங்கும் கழக உடன்பிறப்புகளின் அணிவகுப்பும் களப்பணியும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறும் வரை ஓய்வின்றிச் செல்லட்டும். தொய்வின்றித் தொடரட்டும்.

 மகத்தான வெற்றியுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்! கழகத்தின் வெற்றி முழக்கம் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *