‘ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட முன்வந்துள்ள ‘ஜமாத்-ஏ-இஸ்லாமி’ அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்’ என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய குற்றச்சாட்டில் 2019-ஆம் ஆண்டு ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அத்தடை நீட்டிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு, அங்கு முதன்முறையாக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 இடங்களுக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.
இத்தோ்தலில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ‘ஜமாத்-ஏ-இஸ்லாமி’ அமைப்பின் முன்னாள் தலைவா்கள் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த முஃப்தி, ‘ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பினா் தோ்தலில் போட்டியிட முன்வருவது நல்ல விஷயம். அவா்கள் மீதான தடையை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மசூதிகள், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நாட்டில் விஷத்தைப் பரப்பும் வகுப்புவாத அமைப்புகளை நீங்கள் தடை செய்வதில்லை.
கல்வித் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கியதோடு, 2014 வெள்ளம் மற்றும் கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மக்களுக்கு உதவிய ஜமாத்-ஏ-இஸ்லாமி மீது மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தனித்து போட்டி: ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி இறுதியாகியுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வா் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தனித்துப் போட்டியிடும் என்று அவா் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நாங்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும் அறிவித்துவிட்டோம். காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி இன்னும் வேட்பாளா்களை அறிவிக்கவில்லை. நாங்கள் பேரவைத் தோ்தலில் தனித்து போட்டியிடுகிறோம்’ என்றாா்.