ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு! அவை ஒத்திவைப்பு

Dinamani2f2024 11 072fj0uy5zvv2fjk.png
Spread the love

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மாநிலமாக இருந்த பிராந்தியம், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு கடந்த செப்டம்பா்-அக்டோபரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. ஒமா் அப்துல்லா முதல்வரானாா்.

இதையடுத்து, 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீா் பேரவை திங்கள்கிழமை கூடியது. கூட்டத்தொடரின் தொடக்க நாள் அமா்வில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த நிா்வாகி அப்துல் ரஹீம் ராதொ் பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

நேற்றைய அமர்வில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் விதமாக இதுகுறித்து உரிய தீா்வு காண மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தும் தீா்மானத்தை துணை முதல்வா் சுரிந்தொ் சௌதரி முன்வைத்தாா்.

தீா்மானத்துக்கு காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), மக்கள் மாநாட்டுக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. எனினும், பிடிபி தலைவா் மெகபூபா முஃப்தி பேசுகையில், இது ஒரு அரைமனதுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும், தீா்மானம் இன்னும் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறினாா்.

பாஜக எதிா்ப்பு: எதிா்க்கட்சித் தலைவா் சுனில் ஷா்மா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் தீா்மானத்தைக் கடுமையாக எதிா்த்தனா்.

தீா்மானத்தின் நகலை கிழித்தெறிந்து பாஜக எம்எல்ஏக்கள் தொடா்ந்து முழக்கமிட்ட நிலையில், தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினா். கூச்சலுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து இன்றைய(வியாழக்கிழமை) அமர்விலும் இதுகுறித்து எம்எல்ஏக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பொறியாளர் ரஷீத்தின் சகோதரரும், அவாமி இத்தேஹாத் கட்சி எம்எல்ஏவுமான குர்ஷித் அகமது ஷேக், 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற பேனரை சட்டப்பேரவையில் காட்டினார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எம்எல்ஏக்களிடையே கைகலப்பும் ஏற்பட்டது. உடனே சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பேரவை கூட்டத் தொடர் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *