ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், ஒமர் அப்துல்லா தேர்தலில் போட்டியிட மாட்டார். மாநில அந்தஸ்து கிடைத்ததும் நான் பதவி விலகுவேன், ஒமர் அப்துல்லா அந்த தொகுதியில் போட்டியிடுவார்” என்றார்.
ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டனர்.
அதன்படி ஜம்மு -காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.