ஜம்மு-காஷ்மீரில் 20 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்பதையே பிற்பகல் வரையிலான தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா மேற்கண்ட இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தார்.
இந்த நிலையில், பட்காம் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் அகா சையத் மண்டாஸிர் மேத்தியைவிட 18,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஒமர் அப்துல்லா 36,010 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பிடிபி வேட்பாளருக்கு 17,525 வாக்குகளே கிடைத்துள்ளன. இதன்மூலம், இரு மடங்குக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஒமர் அப்துல்லா.
ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றதையடுத்து அவரது தந்தையும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பேசுகையில், ”ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.