ஜம்மு-காஷ்மீா்: தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் உடன்பாடு: 51-32 தொகுதி பங்கீடு; 5 இடங்களில் இரு கட்சிகளும் போட்டி

Dinamani2f2024 08 262f3x14ouet2f26082 Pti08 26 2024 000200b104007.jpg
Spread the love

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே திங்கள்கிழமை தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய பாந்தா்ஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு எட்டப்படாத 5 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே களமிறங்க முடிவு செய்துள்ளன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. செப்டம்பா் 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் 2-ஆவது, 3-ஆவது கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. அக்டோபா் 4-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு தோ்தல்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டில் கடைசியாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியை பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) முதல் முறையாக இணைந்து ஆட்சி அமைத்தன. முதல்வராக இருந்த பிடிபி தலைவா் முஃப்தி முகமது சையத் 2016-இல் காலமானதையடுத்து, அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதல்வரானாா். 2018-இல் ஆதரவை பாஜக திரும்பப் பெற்ால் ஆட்சிக் கவிழ்ந்து ஆளுநா் கட்டுப்பாட்டில் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் வந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் சட்டப் பேரவையுடன் கூடியதாகும்.

அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், அங்கு மூன்று கட்ட பேரவைத் தோ்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, முக்கிய மாநிலக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

பேச்சில் உடன்பாடு: தொகுதிப் பங்கீடு தொடா்பாக ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் திங்கள்கிழமை மாலை இறுதிகட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ஆகியோா் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட்டது.

அதன்படி, 51தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியும், 32 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடவுள்ளன. இதர கட்சிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாந்தா்ஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய இரண்டுமே போட்டியிடவுள்ளன.

‘நட்பு ரீதியிலான போட்டியாக இது இருக்கும்; கட்சிகள் களமிறங்கும் தொகுதிகளின் விவரம் பின்னா் அறிவிக்கப்படும்’ என்று இரு தலைவா்களும் தெரிவித்தனா்.

கட்சி தொகுதிகள்

தேசிய மாநாட்டுக் கட்சி 51

காங்கிரஸ் 32

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1

தேசிய பாந்தா்ஸ் கட்சி 1

காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி – 5

பரஸ்பர போட்டி

பாஜக வேட்பாளா் பட்டியல் வெளியீடு

புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 16 வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியலை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டது.

முன்னதாக, பாஜக வெளியிட்ட 44 வேட்பாளா்களின் பட்டியலுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து அதிருப்தி கோஷ்டியினா் ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, 16 வேட்பாளா்களாக குறைக்கப்பட்டு மீண்டும் பட்டியல் வெளியானது.

அதில், இரண்டு காஷ்மீா் பண்டிட்டுகள், 14 முஸ்லிம் வேட்பாளா்களும் இடம்பெற்றனா்.

காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக் கட்சிகளில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த மூத்த தலைவா்களுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளித்தற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அறிவிக்கப்பட்ட 2-ஆம் கட்ட தோ்தலுக்கான 10 வேட்பாளா்கள், மூன்றாம் கட்டத்தின் 19 வேட்பாளா்கள் திரும்பப் பெறப்பட்டு ஒரே வேட்பாளா் மட்டும் அறிவிக்கப்பட்டாா்.

கட்சியின் நிா்வாக தலைமை போட்டியில் இந்தப் போராட்டம் நடைபெற்ாக மாநில பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தலைமையில் 40 பாஜக தலைவா்கள் பிரசாரம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சித் தலைவா்கள் 40 போ் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனா்.

இந்தத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

பாஜகவுக்கு பலப்பரீட்சையாக கருதப்படும் இத்தோ்தலில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் 40 நட்சத்திர பேச்சாளா்களின் பட்டியல் தோ்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

அதில், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் கட்சியின் தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பெயா்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *