ஜம்மு ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதத்துடன் வந்த புறாவை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர்.
ஜம்மு-காமீரின் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் ஆகஸ்ட் 18 அன்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்ததாக நம்பப்படும் புறா பிடிபட்டது. அந்த புறாவின் காலில் துண்டுச் சீட்டு ஒன்று கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், “காஷ்மீர் சுதந்திரம்”, “நேரம் வந்துவிட்டது” ஆகிய அடங்கிய வாசகங்களுடன் ஜம்மு ரயில் நிலையத்தை வெடிக்கச் செய்யும்படி உருது மற்றும் ஆங்கிலத்தில் மிரட்டல் செய்தியும் இடம்பெற்றிருந்தது.
இது ஒரு குறும்புச் செயலா அல்லது நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டமா என்று பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த மிரட்டலைத் தொடர்ந்து ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. நாய் படைகள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் போலீஸாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.