ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அலங்காநல்லூரில் ஸ்டாலின் அறிவிப்பு  – Kumudam

Spread the love

மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பாலமேடு ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் சார்பாக ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பாக ஒரு காரும் வழங்கப்படுகிறது. 

2வது பரிசுபெறும் காளை உரிமையாளருக்கு கன்று குட்டியுடன், நாட்டு பசுமாடும், இரண்டாம் வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்படவுள்ளது. 3வது இடம் பிடிக்கும் வீரருக்கு இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண, எம்பி. சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் காலை 11.30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் அலங்காநல்லூர் வருகை தந்தார். 

அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விழா மேடையில் அமர்ந்தவாறு முதல்வர், போட்டியை கண்டுகளித்தார். வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார். அப்போது ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் மோதிரங்களை பரிசாக முதல்வர் வழங்கினார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி அதிக காளைகளை தழுவிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் உயர்தர ஜல்லிக்கட்டு பயிற்சி, சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேற்றைய முன்தினம் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளையை அடக்கிய வீரர் பாலமுருகனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஆனாலும் இந்த பரிசு வாங்கியதில் தனக்கு திருப்தி இல்லை. உயிரை பணயம் வைத்து காளைகளை அடக்குகிறோம் எங்களுக்கு அரசு வேலை அளித்த நன்றாக இருக்கும்  என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *