ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரத்தைப் போன்றவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா வலம் வருகிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கியப் பங்கு வகித்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்திய அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே வழிநடத்தியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மாற்றியமைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக பும்ரா வழிநடத்தினார். கரோனா தொற்று காரணமாக அப்போது ரோஹித் சர்மா அணியில் விளையாடவில்லை. அதேபோல, கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ஜஸ்பிரித் பும்ரா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று கொடுத்தார்.
இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு கோஹினூர் வைரத்தைப் போன்றவர் எனவும், கேப்டன் பொறுப்பு அவருக்கு காயம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் எனவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பும்ரா மிகவும் அமைதியாக இருப்பவர். அவருக்கு போட்டி குறித்த அனுபவங்கள் அதிகம் உள்ளன. வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை எப்படி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாட வைக்க முடியும். இந்திய அணித் தேர்வுக்குழுவுக்கு முன் உள்ள மிகப் பெரிய கேள்வியே இதுதான். வேகப் பந்துவீச்சாளரான பும்ரா அவரது உடல்தகுதியை தொடர்ந்து நன்றாக வைத்துக் கொள்வது அவசியம். அவரை முக்கியமான போட்டிகளில் மட்டும் விளையாட வைக்க வேண்டும்.
ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரத்தைப் போன்றவர் என்பதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவரை முக்கியமான போட்டிகளில் விளையாட வைத்து நீண்ட காலத்துக்கு அணியில் வைத்திருக்க வேண்டும். அவரால் அணிக்குத் தேவையான தாக்கத்தை போட்டியில் கொடுக்க முடியும். அவருக்கு கேப்டன் பொறுப்பினைக் கொடுத்து சுமையை அதிகப்படுத்தினால், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பின்பு அது அணிக்கு மிகப் பெரிய பிரச்னையாக மாறிவிடும் என்றார்.
அணியைக் கேப்டனாக வழிநடத்த பந்துவீச்சாளர்களே மிகவும் சிறந்தவர்கள் என ஜஸ்பிரித் பும்ரா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.