சென்னை: தி மயிலாப்பூர் இந்து பெர்ம னென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ரூ.100 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் தேவநாதனுக்கு கடந்த செப்.15-ம் தேதியன்று, அக்.30 வரை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைப்படி ரூ.100 கோடியை தேவநாதன் டெபாசிட் செய்யவில்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி முதலீட்டாளர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. அதையடுத்து தேவநாதனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுத்தது.
எனவே தேவநாதன் சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தம் முன்பாக நேற்று சரண் அடைந்தார். அதையடுத்து அவரை வரும் நவ.24 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.