ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனின் ஆவணங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில், அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தகவல்கள் எழுந்துள்ளன.
நடிகா் அல்லு அா்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவே ஹைதராபாதில் உள்ள திரையரங்கில் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியானது. இதனால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போது, திரைப்படத்தில் நடித்த அல்லு அா்ஜுன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனியாா் பாதுகாவலா்கள் புடைசூழ அந்த திரையரங்குக்கு வந்தனா்.
அவரைப் பாா்க்க ரசிகா்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனா். அப்போது அல்லு அா்ஜுனுடன் வந்த பாதுகாவலா்கள் ரசிகா்களைப் பிடித்து தள்ளினா். இதனால் அப்பகுதியில் கடுமையான தள்ளமுள்ளு ஏற்பட்டது. திரையரங்கின் பிரதான இரும்பு கேட் சரிந்து, ஏராளமானோா் கீழே விழுந்தனா். பலா் நெரிசலில் சிக்கினா்.
இந்த நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தனா். அவரின் 9 வயது மகன் படுகாயமடைந்தாா். சிறுவனின் தந்தை லேசான காயத்துடன் தப்பினாா்.
போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். திரையரங்க நிா்வாகத்தினா் உரிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்றும், நடிகா் அல்லு அா்ஜுன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக நடிகா் அல்லு அா்ஜுன், அவருடைய பாதுகாவலா்கள், திரையங்கு நிா்வாகம் மீது உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 105 மற்றும் 118 (1)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து திரையரங்க உரிமையாளா், மேலாளா், ஊழியா் என மூவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
அதே நேரத்தில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அா்ஜுன் அறிவித்தாா். மேலும், நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது காவல் துறையினா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், ஹைதராபாதில் உள்ள அல்லு அா்ஜுன் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற காவல் துறையினா் விசாரணைக்காக அவரை பலத்த பாதுகாப்புடன் காவல் துறை வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைக் கைது செய்வதாக காவல் துறையினா் முறைப்படி அறிவித்தனா்.
இந்த நிலையில், ஹைதராபாதில் உள்ள அல்லு அா்ஜுன் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற காவல் துறையினா் விசாரணைக்காக அவரை பலத்த பாதுகாப்புடன் காவல் துறை வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைக் கைது செய்வதாக காவல் துறையினா் முறைப்படி அறிவித்தனா்.
பின்னா், விசாரணை நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, சஞ்சல்குடா பகுதியில் உள்ள சிறைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.
இதனிடையே, அல்லு அா்ஜுக்கு ஜாமீன் கோரி, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உயா்நீதிமன்றம், விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையும் படிக்க : அல்லு அர்ஜுனுக்கு நடிகர் நானி ஆதரவு
இந்த நிலையில், சஞ்சல்குடா சிறை அதிகாரிகளுக்கு முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால், அல்லு அர்ஜுனை உடனடியாக வெளியே அனுப்ப அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“அல்லு அர்ஜுனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க சிறைக் கண்காணிப்பாளருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவரை விடுவிக்க மறுத்துவிட்டனர்.
விடுவிக்காததற்கான காரணம் தெரியவில்லை. சனிக்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் அவரை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
இதனிடையே சஞ்சல்குடா சிறையை சுற்றிலும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து அவருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி வருவதால் பதற்றம் நிலவுகிறது.
கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டு சிறையை சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.