ஜார்கண்டில் வருகிற 13 ந்தேதி மற்றும் 20 ம் தேதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.
அமலாக்க துறை சோதனை
இந்தநிலையில் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஆலம்கீர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லால் தொடர்புடைய வீடுகள் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது சஞ்சீவ் லாலின் உதவியாளர் ஜஹாங்கீருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடந்தது.
17 மணி நேரம் நீடித்தது
இதில் பீரோவில் இருந்து பைகளில் பதுக்கி வைத்திருந்த கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை எண்ணும் பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.கட்டு கட்டாக இருந்த பணத்தை பிரித்து அவர்கள் எண்ணினர்.
சுமார் 17 மணி நேரம் நீடித்த இந்த பணியில் மொத்தம் ரூ.35.23 கோடி மதிப்புள்ள ரொக்கம் இருந்தது இறுதி செய்யப்பட்டது
பணம் எண்ணும் போது பல எந்திரங்கள் பழுதடைந்து புதியவை கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எந்த முடிவுக்கும் வரக்கூடாது
இது குறித்து அமைச்சர் ஆலம் கூறும்போது , சஞ்சீவ் லால் ஒரு அரசு ஊழியர். அவர் என்னுடைய தனிப்பட்ட செயலர். சஞ்சீவ் லால் ஏற்கனவே இரண்டு முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளராக இருந்துள்ளார்.
அனுபவத்தின் அடிப்படையில் தனிப்பட்ட செயலர்களை நியமிப்பது வழக்கம். அமலாக்கத்துறை விசாரணையை முடிப்பதற்குள் யாரும் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. சோதனை குறித்து கருத்து சொல்வது சரியல்ல என்றார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் ஆலம் கிர் பாக்கூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருடைய தனிச் செயலரின் உதவியாளர் வீட்டில் பெரிய அளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை தலைமைப் பொறியாளர் வீரேந்திர குமார் ராம் மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இன்று சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வீடியோ காட்சி வைரல்
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வீரேந்திர குமார் ராம் மீது டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டி அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு தொடர்ந்து அவரைக் கைதும் செய்தது குறிப்பிடத்தக்கது.
பணகட்டுகளை மலை போல் குவித்து அதிகாரிகள் என்னும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது