ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் 7 பேருடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
41 வயது மதிக்கத்தக்க நோயாளி, விபத்து ஒன்றில் சிக்கி 63 சதவீத தீக்காயங்களுடன் ராஞ்சியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு மாற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டது.
அதற்காக ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான “பீச்கிராஃப்ட் சி90′ (Beechcraft C90) ரக விமானம், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து இன்று இரவு 7.11 மணிக்கு டெல்லி நோக்கிப் புறப்பட்டது.
இந்த விமானத்தில், நோயாளியுடன் இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர், ஒரு துணை மருத்துவப் பணியாளர் மற்றும் நோயாளியின் உதவியாளர்கள் இருவர் என மொத்தம் 7 பேர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. இரவு 7.34 மணியளவில் கொல்கத்தா கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம், வாரணாசிக்கு தென்கிழக்கே விபத்துக்குள்ளானதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஏஏஐபி (AAIB) குழு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் விமானத்தில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.