ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.
ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா(ஜேஎம்எம்) 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து, பிறகு காட்சி மாறி, இந்தியா கூட்டணி வெற்றியைப் பதிவு செய்தது.
ஜார்க்கண்ட் பேரவையில் 41 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி என்ற நிலையில், இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஜார்க்கண்ட்டில் மீண்டும் ஆட்சியமைக்கிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதர கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்று உள்ளது.
ஜார்க்கண்டில் ‘இண்டி’ கூட்டணியிடமிருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.