ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளதாக மாநில பாஜக தேர்தல் அதிகாரியும் அஸ்ஸாம் மாநில முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று (செப். 24) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால், பாஜக தேர்தலுக்குத் தயாராகவுள்ளது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மக்கள் மனம் மாநில ஆட்சியில் மாற்றத்தை விரும்புகிறது.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக ஏற்கெனவே கூட்டணியில் உள்ளது. ஜனதா தளத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் இது தொடர்பான உறுதியான அறிவிப்பு வெளியாகும் என ஹிமந்த பிஸ்வ சர்மா குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி நகரத்தில் நேற்று (செப். 23) பழங்குடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான யாத்திரையை உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்தார். பழங்குடி மக்களின் நிலவுரிமை, பெண்களில் உரிமை உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.
81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் நடப்பு அரசின் பதவிக்காலம் 2025 ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.