சென்னை: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் (81) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்திகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பு மற்றும் சமூக நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அவரது வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. பழங்குடியின மக்களின் பல்லாண்டுகால உரிமை கோரலான புதிய மாநிலத்தை தோற்றுவித்த அரசியல் சக்தி. அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
பாமக தலைவர் அன்புமணி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்னிகரற்ற தலைவர்களில் ஒருவரான சிபு சோரன், தனது 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 28 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலம் அமைவதற்கு காரணமாக இருந்தவர். சிபு சோரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
தி.க. தலைவர் கி.வீரமணி: பழங்குடியின மக்களைத் திரட்டி, அரசியல் சக்தியாக்கிப் போராடியதுடன், ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாகக் காரணமானவர்களுள் முக்கிய மானவர் சிபு சோரன். மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டக் களங்களில், வடநாட்டில் நாம் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சமூகநீதி உணர்வாளர். மதவாத சக்திகளுக்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.