ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று(நவ.28) பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் மொராபாடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
49 வயதாகும் சோரன் முதல்வராக பதவியேற்பது இது நான்காவது முறையாகும். பதவியேற்பதற்கு முன், ஜேஎம்எம் தலைவரும், அவரது தந்தையுமான ஷிபு சோரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துக்கள். உங்களது பதவிக்காலம் தொடர வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ஷிபு சோரன், தமிழக துணை முதல்வர் உதயநிதி, மேற்குவங்க முதல்வர் மம்தா, ஆம் ஆத்மி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.