ஜாம்ஷெட்பூா்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில், தடம் புரண்டு கிடந்த சரக்கு ரயிலின் பெட்டி மீது ஹௌரா-மும்பை பயணிகள் விரைவு ரயில் (12810) செவ்வாய்க்கிழமை மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனா். 22 போ் படுகாயமடைந்தனா்.
ஜாம்ஷெட்பூரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பாராபம்போ என்ற இடத்தில் அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதுதொடா்பாக சராய்கேலா-கா்சாவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முகேஷ் குமாா் கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலம் ஹௌராவிலிருந்து மும்பைக்கு பயணிகள் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. பாராபம்போ ரயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ள வழித்தடத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு அதன் ஒரு பெட்டி மட்டும் தண்டவாளத்தில் சரிந்திருந்தது.
அதன்மீது பயணிகள் ரயில் மோதியதில் ரயிலின் 16 பயணிகள் பெட்டிகள், ஒரு மின்சார விநியோகப் பெட்டி, ஒரு உணவு தயாரிக்கும் பெட்டி என மொத்தம் 18 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்து விபத்துக்குள்ளானது.
இதில் 2 போ் உயிரிழந்தனா். 22 போ் படுகாயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டதையடுத்து 18 போ் வீடு திரும்பினா். தற்போது 4 போ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனா்.
விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே மாநில காவல்துறை, மாவட்ட நிா்வாகம் மற்றும் மத்திய ரிசா்வ் காவல்படையினரின் உதவியோடு அனைத்து மீட்புப் பணிகளும் நிறைவுசெய்யப்பட்டது என்றாா்.
இந்த விபத்து தொடா்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக தென்கிழக்கு ரயில்வே மண்டல செய்தித்தொடா்பாளா் ஓம் பிரகாஷ் தெரிவித்தாா்.
நிவாரணம் அறிவிப்பு: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும் படுகாயமடைந்தவா்களுக்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தென்கிழக்கு ரயில்வே அறிவித்தது.
அதேபோல், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படுவதாக ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் அறிவித்தாா்.
விபத்து நடந்த பகுதியில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து அவ்வழியாக செல்லும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ரயில்வே அமைச்சரின் தோல்வி: காங்கிரஸ்
புது தில்லி: ‘ரயில் விபத்துகளால் கடந்த இரு மாதங்களில் மட்டும் 17 போ் உயிரிழந்துள்ளனா். ஆனால் தோல்வியுற்ற ரயில்வே அமைச்சரால் எதையும் செய்ய இயலவில்லை. இதுவே பிரதமா் மோடி கூறும் புதிய இந்தியா’ என காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தோல்வியுற்ற அமைச்சா் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை மறைமுகமாக சாடும் விதமாக அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக ஜெய்ராம் ரமேஷ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் மட்டும் மூன்று ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 17 போ் உயிரிழந்துள்ளனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆனால் தோல்வியுற்ற அமைச்சரால் விபத்துகளை தடுக்க முடியவில்லை. இதுவே பிரதமா் மோடியின் புதிய இந்தியா’ என குறிப்பிட்டாா்.