ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு பிறகு புதுச்சேரியில் வாகனப்பதிவு 35% அதிகரிப்பு | Vehicle registrations increase by 35 percent after GST reforms in Puducherry

1379220
Spread the love

புதுச்சேரி: ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு பிறகு புதுச்சேரியில் வாகனப்பதிவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்திய அரசின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் கடந்த செப்டம்பர் 22-ல் அமலுக்கு வந்தது. புதுச்சேரி வணிக வரித் துறையின் தரப்பில் இந்த சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது பற்றி வணிகவரித்துறை செயலர் மற்றும் ஆணையர் யாசின் சவுதிரியிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறையின் விவரங்களின் படி வாகனப் பதிவுகளின் அளவு 35% அதிகரித்துள்ளது. இதில் கார்களின் அளவு மட்டும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 37% அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 35% அதிகரிப்பு, மூன்று சக்கர வாகனங்கள் 38%, சரக்கு வாகனங்கள் – 53%, பேருந்துகள் 50% அடங்கும்.

இதேபோல், முக்கிய பல்பொருள் அங்காடிகளின் விற்பனை விவரங்களின் படி, மக்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வகை பொருட்களின் விற்பனை 15% அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் தினசரி பயன்படுத்தும் ஹேர் ஆயில் போன்ற பொருட்களில் கூட விற்பனை அளவு 48% அதிகரித்துள்ளது. இதே போல் நெய் 49% மற்றும் மற்றும் பற்பசை விற்பனை 10% அதிகரிப்பைக் கண்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்களினால் பொருளாதார தாக்கத்தை வணிகவரித்துறை தொடர்ந்து கண்காணிக்கிறது. குறைந்த வரி விகிதங்களின் பலன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும். பண்டிகைக் கால விற்பனையும், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் விகிதக் குறைப்பும் இணைந்து, வருவாய் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி வரும் மாதங்களில் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *