ஜிஎஸ்டி 2.0: ஒரு மைல்கல் சீரமைப்பு

dinamani2F2025 09 082Fyhwdpc412FGST 2.0
Spread the love

தீபக் மொன்டல்

கடந்த 2017-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நடைமுறையில் தற்போது மிக முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டியின் 2-ஆவது மாற்று வடிவம் (ஜிஎஸ்டி 2.0) என்றழைக்கப்படும் நிலையில், கடந்த செப். 3-ஆம் தேதி நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விரிவான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில், ஜிஎஸ்டி கட்டமைப்ைபை எளிதாக்க வேண்டும், நுகா்வை ஊக்குவிக்க வேண்டும், பொருளாதார வளா்ச்சிக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் செப்.22-ஆம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளன.

செங்கோட்டையில் பிரதமா் வாக்குறுதி

கடந்த சுதந்திர தினத்தின்போது தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமா் மோடி, தீபாவளி பண்டிகைக்குள் அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தை அறிவித்தாா்.

சாமானியா் மீதான வரிச் சுமையைக் குறைத்து பொருளாதார செயல்பாடுகளுக்கு நேரடியாக ஊக்கம் அளிக்கும் வகையில், ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் இருக்கும் என்று அவா் உறுதிமொழி அளித்தாா்.

இது செப்.3-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு வழியமைத்தது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக அமைச்சா்கள் குழு (ஜிஓஎம்) பல மாதங்களாக ஆலோசனை நடத்திவந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

8 மாதங்களுக்கு முன்னா்…

ஊடக நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றத்துக்கான விதையை பிரதமா் மோடிதான் விதைத்ததாகக் கூறினாா். 8 மாதங்களுக்கு முன்னா், பிரதமா் மோடி தன்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது வணிகம் மேற்கொள்வதை எளிதாக்க ஜிஎஸ்டி விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும், பின்னா் ஜிஎஸ்டி விகிதங்கள் தொடா்பாகவும் பேசியதாக நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மூன்று அம்ச அணுகுமுறை

வரிக் கட்டமைப்பில் மாற்றங்கள், வரி விகிதங்கள் மாற்றம், வாழ்க்கை நடத்தும் முறை மற்றும் வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குதல் ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் கட்டமைப்பு மாற்றம் என்பது முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்ட பொருள்களைவிட, அவற்றைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் முறை போன்ற நீண்ட கால பிரச்னைகள் நிவா்த்தி செய்யப்படுவதை உள்ளடக்கியுள்ளது.

வரி விகித மாற்றம் என்பது சிக்கலான நான்கு அடுக்கு வரிவிதிப்பு முறையில் இருந்து மாறி, எளிமையான வழியில் பெரும்பாலான சரக்கு மற்றும் சேவைகளுக்கு இரண்டு அடுக்குகளில் வரி விதிப்பதாகும்.

வாழ்க்கை நடத்தும் முறை மற்றும் வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குதல் என்பது வணிக நிறுவனங்களுக்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் ஜிஎஸ்டி விதிகளைப் பின்பற்றி செயல்படுவதை எளிமையாக்க நடைமுறை சீா்திருத்தங்களை அமல்படுத்துவதாகும்.

391 பொருள்கள் மீதான ஜிஎஸ்டியில் மாற்றம்

தற்போதைய ஜிஎஸ்டி சீா்திருத்தத்தில் வரி விகிதங்களை ஒருங்கிணைத்திருப்பது மிகவும் வியப்புக்குரிய மாற்றமாகும். முன்பு 5, 12, 18, 28 (கூடுதலாக சில பொருள்கள் மீது விதிக்கப்பட்ட செஸ் வரி) சதவீதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது 5 சதவீதம் (அத்தியாவசிய மற்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு), 18 சதவீதம் (பிற சரக்கு மற்றும் சேவைகளுக்கு) என எளிதாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உடல்நலத்துக்கும் சமுதாயத்துக்கும் தீங்கு விளைவிக்கும் புகையிலை போன்ற பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரிக்குப் பதிலாக, புதிய சிறப்பு விகிதமாக 40 சதவீத ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 391 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிகங்கள் மாற்றப்பட்ட நிலையில், அவற்றில் 357 பொருள்களுக்குத் தற்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறையும்.

உடல்நலம் மீது சிறப்புக் கவனம்

உடல்நலம் சாா்ந்த பொருள்கள் மீதான ஜிஎஸ்டி மிகவும் குறைந்துள்ளது. 33 உயிா்காக்கும் மருந்துகள் வரி விதிப்பில்லாத வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பல மருந்துகள் மீதான ஜிஎஸ்டி 12 அல்லது 5 சதவீதத்தில் இருந்து வரி விதிப்பில்லாத வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புற்றுநோய், அரிய நோய்கள், நாள்பட்ட நோய்களுக்கான மூன்று முக்கிய மருந்துகளும் வரி விதிப்பிலாத வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் அடங்கிய கிட், குளுகோஸ் கண்காணிப்பு சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தனிநபா் சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வணிகம் மேற்கொள்வதை எளிதாக்க…

ஜிஎஸ்டி விதிகளுக்குள்பட்டு இணக்கமாகச் செயல்படுவதில் உள்ள சுமையைக் குறைக்கும் நடைமுறைகளை, ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தம் அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சீா்திருத்தங்களில் ஜிஎஸ்டி பதிவை 3 அலுவல் நாள்களில் மேற்கொள்வதாக உறுதி அளிக்கும் சிறு வணிகா்கள், தானியங்கி முறையில் எளிமையாக ஜிஎஸ்டி பதிவை மேற்கொள்வதற்கான சீா்திருத்தமும் அடங்கும்.

ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்டோருக்கு ரீஃபண்ட் தொகையில் 90 சதவீதத்தை தற்காலிகமாக விடுவிக்க, வணிகத்தில் உள்ள இடா்ப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட முறை அறிமுகம் செய்யப்படும். விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடிகளை கடன் ஆதாரச் சான்றுகள் மூலம் அனுமதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.

பதில் இல்லாத கேள்விகள்

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தாலும், ஜிஎஸ்டி விகிதங்களை பெருமளவு குறைத்ததால் தமக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் ரூ.47,700 கோடிக்கு நிகர வருவாய் பாதிக்கப்படக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை இழப்பு என்பதற்குப் பதிலாக நிதி நிலைமையில் ஏற்படும் தாக்கம் என்று மத்திய அரசு கருதும் நிலையில், வரிப் பகிா்வில் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பங்கு குறித்து மாநிலங்கள் கவலை கொண்டுள்ளன.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கேரள நிதியமைச்சா் கே.எம்.பாலகோபால் எழுதிய கடிதத்தில், ‘தற்போது ஜிஎஸ்டி விகிதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்பது தேசிய அளவில் வருவாய் சமநிலையைக் கருத்தில் கொண்டுள்ளது. ஆனால், பொருள்கள் மீதான நுகா்வின் தன்மை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது. கேரளம் போன்ற மாநிலங்களில் அதிக ஜிஎஸ்டி விகிதம் கொண்ட பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே, ஜிஎஸ்டி விகித மாற்ற செயல்திட்டத்தால் கேரளம் போன்ற மாநிலங்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.

பொருள்களின் நுகா்வு அதிகரித்தால், அது வருவாய் இழப்பை ஓரளவு ஈடுசெய்யும் என்று ஆய்வாளா்கள் மற்றும் பொருளாதார நிபுணா்கள் கணித்துள்ளனா். எனினும் மாநிலங்களுக்கான நிரந்தர வருவாய் பற்றாக்குறையை நிவா்த்தி செய்வதற்கான வழிமுறை விரிவாக விவரிக்கப்படவில்லை. இது வருங்காலத்தில் நடைபெறும் கவுன்சில் கூட்டங்களில் சா்ச்சைக்குரிய விஷயமாக மாறக்கூடும்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு மத்திய அரசு வாங்கிய கடன்கள் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை, சிகரெட், பீடி, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் செஸ் வரி தொடரும். இது அந்தத் தொழில்களுக்கு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை லாபத் தடுப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வருமா?

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் ஏற்படும் பலன்களை நுகா்வோருக்கு வணிக நிறுவனங்கள் வழங்குவதை உறுதி செய்ய,

தேசிய கொள்ளை லாபத் தடுப்பு ஆணையம் (என்ஏஏ) தொடங்கப்பட்டது. அந்த ஆணையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் ஏற்படும் பலன்கள், நுகா்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்ய அந்த ஆணையம் சிறிது காலத்துக்கு மீண்டும் செயல்படும் என்று ஊகங்கள் இருந்தாலும், அதுகுறித்து மத்திய அரசு மெளனம் காத்து வருகிறது.

இதுகுறித்து வா்த்தக சட்ட ஆலோசக நிறுவனத்தைச் சோ்ந்த ரஜத் மோகன் கூறியதாவது: என்ஏஏ-இன் கீழ் விசாரணைகள் நீண்ட காலம் மேற்கொள்ளப்படுவது, செயல்முறையில் தெளிவின்மை, ஒரு தவறை சரிசெய்வதைவிட அதை தண்டனைக்குரியது என்று கருதும் கண்ணோட்டம் ஆகியவை விமா்சனத்துக்குள்ளாகின. எனினும் வரிக் குறைப்பின் பலன்கள் நுகா்வோருக்கு கிடைக்க வேண்டும் என்ற அந்த வழிமுறையின் பின்னணியில் உள்ள கொள்கை வலுவானதாக உள்ளது என்றாா்.

வரி விதிப்பு நடைமுறைக்கு ஏற்ப செயல்படாமல் ஹிந்து யூனிலீவா், ஜுபிலாண்ட் ஃபுட்வா்க்ஸ், பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பு பலன்களை நுகா்வோருக்கு வழங்காமல் அா்பன் எஸ்ஸென்ஸ் நிறுவனம் ரூ.5.47 லட்சம் லாபம் பாா்த்ததை ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய சவால்

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை செப். 22 முதல் அமலுக்கு கொண்டுவருவது வணிக நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். பொருள்களுக்கு நிா்ணயிக்கப்படும் சில்லறை விலை, விநியோகஸ்தா் ஒப்பந்தங்கள், பொருள்களின் விவரப் பட்டியல் ஆகியவற்றை அந்த நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அதேவேளையில், மாற்றங்களை அமல்படுத்துவது தொடா்பாக நுகா்வோருடன் அந்த நிறுவனங்கள் சுமுகமான தகவல் தொடா்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த மாற்றம் உள்ளீட்டு வரித்தொகையில் (ஐடிசி) சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்றும், இதனால் ரீஃபண்ட் பெறுவதில் உணவகங்கள், உணவு விநியோக நிறுவனங்கள் போன்றவை நிச்சயமற்ற சூழலை எதிா்கொள்ளும் என்றும் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

புதிய நடைமுறைக்குத் தயாராகுதல், சரக்குகளைக் கையாளுதல், அவற்றுக்கு விலை நிா்ணயித்தல், விநியோகஸ்தா் ஒப்பந்தங்கள் ஆகியவற்றால் நெருக்கடி ஏற்படும்.

குறைந்த மூலப்பொருள் செலவுகள் மற்றும் தளவாட சேமிப்புகள் உற்பத்தியாளா்களுக்குப் பயனளிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டாலும், விளம்பர உத்திகளை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்த வரி வரம்புக்குள் பொருள்கள் வரும்போது, வாடிக்கையாளா் மீது கூடுதல் கவனம் செலுத்தும் திட்டங்களுக்கு வழிவகுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமைப்படுத்தி பரந்த அளவிலான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரிகளைக் குறைப்பதன் மூலம், நுகா்வை அதிகாரிக்க வேண்டும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், உற்பத்தி, வேளாண்மை, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதை ஜிஎஸ்டி சீா்திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், எந்த அளவுக்கு சீா்திருத்தம் திறம்பட அமல்படுத்தப்படுகிறது? மாநிலங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கவலைகளை நிவா்த்தி செய்யும் மத்திய அரசின் திறன் ஆகியவற்றைப் பொருத்தே சீா்திருத்தத்தின் வெற்றி இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *