ஜிம்பாப்வே டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய சோயப் பஷீர்; இங்கிலாந்து அபார வெற்றி!

dinamani2F2025 05 242Fcav2zhfr2FGruQaG4XsAMVbvS
Spread the love

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (மே 22) நாட்டிங்ஹமில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இதையும் படிக்க: இது வெறும் ஆரம்பம் மட்டுமே… இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து சாய் சுதர்சன்!

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆலி போப் 171 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 140 ரன்களும், ஸாக் கிராலி 124 ரன்களும், ஹாரி ப்ரூக் 58 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தானகா சிவங்கா, சிக்கந்தர் ராஸா, மற்றும் மத்வீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சோயப் பஷீர் அசத்தல்; இங்கிலாந்து அபார வெற்றி

ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் சதம் விளாசி அசத்தினார். அவர் 143 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 26 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் கிரைக் எர்வின் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கஸ் அட்கின்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சாம் குக் மற்றும் ஜோஷ் டங்க் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!

ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. சோயப் பஷீரின் அபார பந்துவீச்சினால், ஜிம்பாப்வே அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 88 ரன்களும், சிக்கந்தர் ராஸா 60 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சோயப் பஷீர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கஸ் அட்கின்சன், ஜோஷ் டங்க் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சோயப் பஷீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *