கோவை: கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ. நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மறுநாள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் உப்பிலிபாளையம் பகுதியில் திரண்டனர்.
அதிமுக ஆட்சியில்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டதாகக் கூறி, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை மேம்பாலத்தில் பயணித்தனர். இந்நிலையில், அதிமுகவினர் தடையை மீறி ஒன்று கூடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என ரேஸ் கோர்ஸ் காவல்நிலை
யத்தில் உதவி ஆய்வாளர், புகார் அளித்தார்.
அதன் பேரில், பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், பட்டாசு வெடித்து விபத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பி.என்.எஸ் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம், செ.தாமோதரன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மாணவரணி மாநில நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர். அதேபோல, பீளமேடு போலீஸாரும் மேற்கண்ட பிரிவுகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.