“‘சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு.
இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும்.
நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள்.
செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்” என்கிற சித்த மருத்துவர் சிவராமன், ஜீரணத்தை சீராக்க வழிமுறைகளையும் சொல்கிறார்.
* ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.