தமிழகத்தில் வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று வருதாலும் அதன் வாக்குஎண்ணிக்கை ஜூன் 4- ந் தேதி வெளியாவதாலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு
இந்நிலையில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலு பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் பாடபுத்தகங்களை அனுப்பும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
தேவையான நடவடிக்கை
பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அன்போடு வரவேற்கின்றோம்
இதேபோல் பள்ளிகள் திறப்பையொட்டி அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டு உள்ள சமூகவலைதள பதிவில்,”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 2024–2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6- ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.