ஜெயலலிதாவின் தலைமைத் தோற்றம்; கருணாநிதியின் சாமர்த்தியம் – அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள் | 07

Spread the love

இந்திய அரசியலில், ஊடகமும் அரசியலும் மிக நெருக்கமாக இணைந்துள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே, அரசியல் தலைவர்களை மக்களிடத்தில் கொண்டு சென்றதில்  தொலைக்காட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு.

தொலைக்காட்சி மூலம் தலைவர்கள், மக்களின் வீடுகளுக்குள் நேரடியாக நுழைந்தனர். அது, அவர்களின் புகழை மட்டும் உயர்த்தவில்லை; அரசியல் பேசும் விதம், மக்களை அணுகும் முறை, தேர்தல் பிரசாரத்தின் தோற்றம் ஆகியவற்றையும் மாற்றியமைத்தது. இதன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல் ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைந்தது.

தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள்

1980களின் இறுதி வரை, தமிழ்நாட்டில் அரசியல் பிரசாரங்கள் பெரும்பாலும் பொதுக் கூட்டங்கள், கட்சி நாளிதழ்கள், சுவர் விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வானொலி ஒலிபரப்புகள் மூலமே நடந்தன. அண்ணா மற்றும் கருணாநிதி போன்ற தலைவர்கள், திறந்த வெளி மேடைகளில் நிகழ்த்திய உரைகள் மற்றும் எழுத்து வழி அரசியலின் மூலம் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை உருவாக்கினர். 1950கள் முதல் 1970கள் வரை, அரசியல் செய்திகளுக்கும் உரைகளுக்கும் கிடைத்த ஒரே மின்னணு ஊடகமாக அகில இந்திய வானொலி செயல்பட்டது.

1975 ஆம் ஆண்டு ஜனவரியில், சென்னையில் தூர்தர்ஷன் நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தொலைக்காட்சி அறிமுகமானது. ஆனால், மக்களிடையே அதன் பரவல் என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பெரும்பாலும் சென்னை போன்ற நகரப் பகுதிகளில்தான் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் சென்றடைந்தன. பொதுமக்களிடையே தொலைக்காட்சிப் பெட்டிகள் அரிதாக இருந்தன. தினசரி ஒளிபரப்பு நேரமும் குறைவாக இருந்தது; அரசியல் நிகழ்ச்சிகளும் மிகக் குறைவு.

இதற்கிடையே, 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தூர்தர்ஷன் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. செய்தி ஒளிபரப்புகள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கருத்துகள், விமர்சனங்கள், அரசுக்கு எதிரான செய்திகள் பெரும்பாலும் தொலைக்காட்சியில் இடம்பெறவில்லை. அரசியல் தலைவர்கள் தொலைக்காட்சியில் தோன்றினாலும், அது அரசு அனுமதித்த வடிவங்களில் மட்டுமே இருந்தது. பொதுமக்களுடன் நேரடியாக உரையாடும் மேடையாக தொலைக்காட்சி அப்போது செயல்படவில்லை.

தமிழ் மொழி ஒளிபரப்புகள் ஆரம்ப காலத்தில் சில கலாசார மற்றும் கல்வி நிகழ்ச்சிகளாக மட்டுமே இருந்தன. அரசியல் செய்திகளும் விவாதங்களும் தெளிவாகத் தோன்றத் தொடங்கியது 1980களின் தொடக்கத்தில் இருந்துதான். மக்களிடையே தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வம் மெதுவாக அதிகரித்தபோதுதான், அது அரசியல் தொடர்புகளுக்கான ஒரு முக்கிய ஊடகமாக மாறத் தொடங்கியது. அதற்கு முன், தேர்தல் அரசியலில் தொலைக்காட்சி முக்கிய ஆயுதமாக இருக்கவில்லை.

1980களின் இறுதி மற்றும் 1990களின் தொடக்க காலத்தில்தான்,தொலைக்காட்சி தமிழ்நாட்டு அரசியலில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. நகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொலைக்காட்சி வைத்திருக்கும் வீடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்தக் காலத்தில் தூர்தர்ஷன் ஒளிபரப்புகள் சென்னை மட்டுமின்றி, பல பகுதிகளுக்கும் சென்றடைந்தன. தமிழ்ச் செய்தி அறிவிப்புகள் மற்றும் நடப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புகள் மக்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின.

1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சியின் தாக்கம் அரசியலில் தெளிவாக உணரத் தொடங்கிய முதல் தேர்தல்களில் ஒன்றாகும். தேர்தல் பிரசார மேடைகளில் நடந்த நிகழ்வுகள், தலைவர்களின் பயணங்கள், செய்தியாளர் சந்திப்புகள் போன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. இதன் மூலம், வாக்காளர்கள் அரசியலை முகங்கள், அசைவுகள், உடல் மொழி ஆகியவற்றின் வழியாகவும் பார்க்கத் தொடங்கினர். இவையெல்லாம் வாக்காளர்களின் மனநிலையை,  நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக பாதிக்கத் தொடங்கிய ஆரம்ப கட்டத் தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

இந்தக் காலகட்டத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள்  காட்சி ஊடகங்களின் வீச்சையும் அதன் ஆற்றலையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தனர். குறிப்பாக, இருவருக்கும் இருந்த திரைப்பட அனுபவம் காரணமாக, தொலைக்காட்சிக்கு ஏற்ப எளிதாகத் தங்களைப் பொருத்திக்கொண்டனர். உட்காரும் முறை, குரலில் ஏற்றத்தாழ்வுகள், நேரடியாகப் பேசும் நடை போன்ற அனைத்தும் தொலைக்காட்சியில் அவர்களது அரசியல் முகத்தை வலுப்படுத்தின.

1991 முதல் 1996 வரையிலான காலகட்டம், தமிழ்நாட்டில் தொலைக்காட்சியும் அரசியலும் நெருக்கமாக இணைந்த ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது. 1991 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்ததால், மக்கள் மனநிலையில் அதிக உணர்ச்சி கலந்த சூழல் காணப்பட்டது. அந்த நேரத்தில், தூர்தர்ஷன் ஒளிபரப்பிய அரசியல் செய்திகள், இரங்கல் காட்சிகள், தலைவர்களின் எதிர்வினைகள் மற்றும் தேர்தல் தொடர்பான காட்சிகள் மக்கள் மனதை பாதித்தன. சொற்களைக் கடந்து, காட்சிகளின் வழியாக அரசியல் மக்களிடம் சென்றடைந்தது.

இந்தக் காலத்தில்தான், தொலைக்காட்சி அரசியல் தலைவர்களின் இமேஜை கட்டமைக்கும் முக்கிய ஊடகமாகவும் மாறியது. ஜெயலலிதாவின் உறுதியான, தீர்மானமான தலைமைத் தோற்றம், தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அவரது பொதுக் கூட்டங்கள், அவர் பங்கேற்ற பெரிய பேரணிகளின் காட்சிகள் அவருக்கான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது. மறுபுறம், மேடை அரசியல் மற்றும் ‘உடன் பிறப்புக்கு கடிதம்’ போன்ற எழுத்து வழி அரசியலில் வலுவாக இருந்த கருணாநிதி, தொலைக்காட்சியையும் தனக்கான அரசியலுக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.  

1993 ஏப்ரலில், கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட சன் டிவி, குறுகிய காலத்திலேயே நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் அதிகம் பார்க்கப்படும் தனியார் தமிழ் சேனலாக மாறியது. பல இடங்களில், கேபிள் தொலைக்காட்சி என்றாலே “சன் டிவி” என அழைக்கப்படும் அளவுக்கு, அதன் தாக்கம் இருந்தது.

1996 ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதாவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தில், சன் தொலைக்காட்சி மிக முக்கியப் பங்கு வகித்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்று, மக்களிடையே அவரது ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை அதிகரிக்கச் செய்ததில் சன் தொலைக்காட்சிக்கும் அப்போது கணிசமான பங்கு இருந்தது. இன்னொருபுறம் போராட்டங்கள், மக்கள் கருத்துகள், முக்கிய தலைவர்களின் பேட்டிகள் போன்றவையும் அரசுக்கு எதிரான மனநிலையை அதிகரிக்கச் செய்தன.அந்த வகையில் 1996 தேர்தலில், மக்களின் அரசியல் பார்வையைக் கட்டமைத்ததில் தொலைக்காட்சி மிக முக்கியப் பங்காற்றியது. 

இதனையடுத்து 1999 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ஜெயா டிவி, அதிமுகவுடன் நெருக்கமாக இணைந்த ஒரு தொலைக்காட்சி சேனலாக அறிமுகமானது. இதன் மூலம், அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரிய தொலைக்காட்சி தளங்களை உருவாக்கும் போக்குத் தொடங்கியது. இதனால், ஊடக அரசியலின் அதிகார சமன்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் கண்டன. அரசியல் தலைவர்கள், அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஒளிபரப்புகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை மாறியது. கட்சிகளின் கருத்துகள், விளக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் தினந்தோறும் வீடுகளுக்குள் சென்று சேர்ந்தன. அரசியல், மேடைகளிலும் செய்தித்தாள்களிலும் மட்டுமல்லாமல், நேரடியாக குடும்ப அறைகளிலும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியது. அதற்கு இந்த தனியார் தொலைக்காட்சிகளின் வருகை பெரும் ஊக்கமாக அமைந்தது. 

இன்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், தேர்தலின்போது  War Room-களை அமைத்து, தங்களது பிரசாரங்களையும் பதிலடிகளையும் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்புகின்றன. ஆனால், 2001 மற்றும் 2006 தேர்தல்களில் கட்சி சார்புடைய தனியார் சேனல்கள்தான், அவற்றின் War Room ஆக செயல்பட்டன. அந்த வகையில், 2001 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சியின்  முழுமையான தாக்கத்தையும் அதன் வெளிப்பாடுகளையும் காணக்கூடிய ஒரு முக்கியக் கட்டமாக அமைந்தது. தேர்தல் பிரசார உரைகள் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்களின்  குறும் பேச்சுத் துணுக்குகள் (sound bites) கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்பட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடி பதில்கள் தொலைக்காட்சிகள் வழியாக வழங்கப்பட்டன. 

2006 தேர்தலில், இதைவிட பன்மடங்கான தாக்கத்தை தனியார் தொலைக்காட்சிகள் ஏற்படுத்தின. கூடவே உள்ளூர் கேபிள் டிவி-கள் மூலமாகவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார பலம் கொண்ட சில வேட்பாளர்கள், கட்சித்தலைமையின் பிரசாரத்தைத் தாண்டி, தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளிபரப்பாகும் கேபிள் டிவி-கள் மூலம், தங்களுக்கான புரமோஷன் உத்திகளை மேற்கொண்டனர். இத்தகைய மாற்றங்களால், அரசியல் மொழியும் மாறத் தொடங்கியது. உரைகள் சுருக்கமானதாக மாறின. முழக்கங்கள் இன்னும் கூர்மையானவையாக அமைந்தன. காட்சிகள் மிக இலாவகமாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டன. இதன் மூலம், தொலைக்காட்சிகள் தமிழக அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டு மையமாக மாறின. 

Representational Image

2007 செப்டம்பரில் தொடங்கப்பட்ட கலைஞர் டிவி, திமுகவுக்கான ஊடகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியது. இதற்குள், தமிழ்நாடு கடும் தொலைக்காட்சிப் போட்டி நிறைந்த ஒரு கட்டத்தில் நுழைந்திருந்தது. அரசியல் செய்திகளும் கருத்துகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இணைந்து, ஒரே நேரத்தில் வீடுகளுக்குள் சென்றடைந்தன.

2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சி சார்ந்த அரசியல் முழுமை பெற்ற நிலையில் இருந்ததை வெளிப்படுத்தியது. நலத்திட்டங்கள், சலுகைகள், மானிய அறிவிப்புகள், மக்கள் நல உறுதிமொழிகள் ஆகியவை தொலைக்காட்சி விளம்பரங்கள், நேர்காணல்கள் மற்றும் செய்தி ஒளிபரப்புகள் மூலம் தீவிரமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், தொலைக்காட்சி ஒரு தகவல் ஊடகமாக மட்டும் இல்லாமல், அரசியல் நேரடியாக நடைபெறும் ஒரு களமாகவே மாறியது.

அந்த வகையில், தொலைக்காட்சி, தமிழ்நாட்டில் “தலைவர்” என்ற சொல்லின் அர்த்தத்தையே மாற்றியது. மக்களைக் கவரும் கவர்ச்சி என்பது, பொதுக் கூட்ட மேடைகளில் பேசுவதிலிருந்து கேமரா முன் நின்று பேசும் திறனாக மாற்றம் கண்டது. தலைவர்களின் பேட்டியோ அல்லது உரையோ, அதனைப் பார்க்கும் மக்களிடத்தில், சில விநாடிகளிலேயே தன் மீதான அல்லது தனது கட்சியின் மீதான நம்பிக்கையையும், அனுதாபத்தையும், தீர்மானத்தையும் பெறும் திறன் போன்றவையெல்லாம்தான் தலைமைக்கு அவசியமான பண்புகளாக மாறின.

இந்த மாற்றம், தனிப்பட்ட கவர்ச்சியும் (charisma) ஒழுங்கான தொடர்புத் திறனும் (Communication Skill)  கொண்ட தலைவர்களுக்கு சாதகமாக அமைந்தது. கட்சித் தொண்டர்கள் வழியாகச் செய்திகளை எடுத்துச் செல்லும் முறையின் முக்கியத்துவம் குறைந்தது. தலைவர்கள் நேரடியாகவே மக்களின் வீட்டறைகளுக்குள் நுழைந்ததால் அரசியல், பொதுமக்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது.

அதே நேரத்தில், தொலைக்காட்சி அரசியலில் சில விமர்சனங்களும் எழுந்தன. அரசியல் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்களின் ஆதிக்கத்தால், அத்தகைய வாய்ப்பும் பொருளாதார பலமும் இல்லாத எதிர்க்கட்சிகளுக்கு சமமான இடம் கிடைக்கவில்லை என்கிற புகார்களும் எழுந்தன. இதனால், ஊடக பன்முகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்தன.

இவை அனைத்தையும் மீறியும், தொலைக்காட்சி இன்று தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பில் ஆழமாக பதிந்துவிட்டதை மறுப்பதற்கில்லை!

(சுவடுகள்… தொடரும்)

Loading…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *