ஜெயலலிதாவை வீழ்த்த ஜானகி அணி சகல பலத்தையும் திரட்டியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ ஜானகி அணியை ஆதரித்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட, அவருடன் சினிமாவில் அறிமுகமான நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை ஜானகி அணி களமிறக்கியது.
இந்தத் தேர்தலில் தி.மு.க, ஜெயலலிதா அணி, ஜானகி அணி, காங்கிரஸ் என நான்குமுனைப் போட்டி நிலவியது. எம்.ஜி.ஆர் மீது அனுதாப அலை இருந்தபோதிலும், கட்சி இரண்டாகப் பிரிந்து நின்றதை பாமரத் தொண்டர்கள் ரசிக்கவில்லை.

ஜெயலலிதா அணி 27 இடங்களைக் கைப்பற்றி அ.தி.மு.க-வின் உண்மையான வாரிசு தான்தான் என்பதை நிரூபித்தது. முன்னாள் முதல்வர் ஜானகி ஆண்டிப்பட்டியிலும், சிவாஜி கணேசன் திருவையாற்றிலும் படுதோல்வி அடைந்தனர். அ.தி.மு.க-வின் இந்த பிளவும், ஜெயலலிதாவின் பிடிவாதமும் 12 ஆண்டுகளாக அதிகாரத்திற்காகக் காத்திருந்த தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்தது. கருணாநிதி தலைமையில் தி.மு.க மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில், தி.மு.க-வின் வெற்றிக்கு ஜெயலலிதா முக்கியக் காரணியாக அமைந்தது அரசியல் களத்தில் நிரூப மறுக்க முடியாத உண்மை.