நினைவாற்றல் என்பது இப்போதெல்லாம் ஆயக் கலைகளில் ஒன்றாகி பலருக்கும் கிட்டாததாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனை அப்படியே விட்டுவிட முடியாது. நினைவாற்றலை வளர்க்க ஞாபகமாக சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் அல்ஜீமர் நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிவிடலாம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. காரணம் ஒமேகா 3 நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது, அதனால் அல்ஜீமர் நோய் பாதிப்புகளிலிருந்து தப்பலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு.
அல்ஜீமர் என்றாலே அது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழக்கச் செய்து ஒரு கட்டத்தில் நாம் யாரென்றே மறக்க செய்துவிடும் அளவுக்கு கொடுமையானது. நினைவாற்றல் மற்றும் மூளைத் திறனை முற்றிலும் பாதிப்படையச் செய்துவிடும் நோய் அது. இந்த நோயைத் தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மத்தி, நெத்திலி, கெளுத்தி மற்றும் சால்மன் வகை மீன்களில் உள்ளது.
சைவத்தில் என்றால், ப்ளக்ஸ் விதை, வால்நட், சோயா பீன்ஸ் மற்றும் புதினா ஆகியவற்றில் காணப்படுகின்றது. மூளையின் ஆரோக்கியத்துக்கு இந்த சத்து மிகவும் அவசியம்.