மதுரை: டங்ஸ்டன் ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், ஏலம் சட்டத்திருத்த நகல்களை எரிக்கும் போராட்டத்தை மேலூரின் அனைத்து கிராமங்களிலும் முன்னெடுப்போம் என, சு. வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம்,மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் லிமிட் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏலம் விடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர். மேலும் இந்த விவகாரம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டும், நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்தும் இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந் நிலையில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமை வகித்தார். மதுரை துணை மேயர் நாகராஜன் உள்பட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சு. வெங்கடேசன் பேசியதாவது: மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக்கோரி மேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். கிராம சபை தீர்மானங்கள், சட்டசபை தீர்மானம், நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டும் இப்போதுவரை, இதை ரத்து செய்வோம் என மத்திய அமைச்சர் கூறவில்லை. பிரதமர் மோடிக்கு வேதத்தின் மீதுள்ள விசுவாசத்தைவிட வேதாந்தா நிறுவனத்தின் மீது விசுவாசம் அதிகம். நாங்கள் இதை விடப்போவதில்லை.
ஏலத்தை உடனே ரத்து செய்யவில்லையெனில் ஏல உத்தரவு நகல், சட்ட திருத்த நகலை எரிக்கும் போராட்டத்தை மேலூரின் அனைத்து கிராமத்திலும் நாங்கள் முன்னெடுப்போம். கடந்தாண்டு ஜூலை 26 ம் தேதி அரிய வகை கனிமங்களை தனியாருக்கு கொடுக்கும் சட்டம் கொண்டு வந்தபோது, தமிழக எம்பிக்கள் எதிர்த்தனர். மாநில அரசின் உரிமையை பறிக்காதே எனக் கூறினோம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மத்திய சுரங்கதுறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்தும் இன்னும் ஒப்பந்தம் ரத்து செய்யவில்லை என்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.