சென்னை: டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அவை கூடியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். அதன்பின்னர், மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
அதில், ‘மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமைகளை மாநில அரசுகளின் அனுமதியின்றி, மத்திய அரசு ஏலம் விடக்கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழக அரசு வலியுறுத்தியிருந்தும், இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது மத்திய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை, தமிழக அரசும் தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு தமிழக முதல்வர் பிரதமரிடம் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இந்தப் பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது’ என்று தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து திமுக – அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, “எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் விவரம்: “டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்கமாட்டேன்” – சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு
அதேவேளையில், “மத்திய அரசு இந்த ஆண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை அரசு அமைதியாக இருந்துள்ளது. மாநில அரசின் கோரிக்கையை மத்திய சுரங்கத் துறை நிராகரித்ததாக வந்த செய்தி மதுரை மாவட்ட மக்களுக்கு சென்றடைந்து அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டதால், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதன் விவரம் > “டங்ஸ்டன் சுரங்க உரிமம் இறுதி செய்யப்படும் வரை அமைதி காத்த தமிழக அரசு” – இபிஎஸ் குற்றச்சாட்டு